சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

சிறுமிக்கு சிறுநீரகக் கோளாறு: ஆன்லைனில் வாங்கிய அழகு சாதனப் பொருளால் வந்த வினை!

ஆன்லைனில் வாங்கிய பாதரசம் கலந்த சருமத்தை வெண்மையாக்கும் க்ரீமைப் பயன்படுத்தியதால் 17 வயது சிறுமிக்குக் கடுமையான சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

ஆன்லைனில் வாங்கிய பாதரசம் கலந்த சருமத்தை வெண்மையாக்கும் க்ரீமைப் பயன்படுத்தியதால் 17 வயது சிறுமிக்குக் கடுமையான சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கேரளத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீமை ஆன்லைனில் வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரங்களைப் பார்த்து அந்த க்ரீம் முகப்பரு மற்றும் கறைகளை நீக்கி சருமத்தை வெண்மையாக்கும் என்று நம்பி சிறுமி அதனை வாங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் அந்த க்ரீம் பயன்படுத்தியது பலனளிப்பது போலத் தெரிந்ததால், கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து அந்தக் க்ரீமை பலமுறை வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அச்சிறுமிக்கு இரத்த அழுத்தக் குறைபாடு மற்றும் மயக்கம் ஏற்படுதல் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.மேலும், கால்களில் வீக்கம் உண்டாகி நடப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். அதேநேரம், கடுமையான சிறுநீரகக் கோளாறும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், கேரளத்தின் மலப்புரத்தில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் மதர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிறுமிக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளுக்கு அவர் பயன்படுத்திய க்ரீமே காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிறுமி பயன்படுத்திய க்ரீமில் 12,500 பிபிஎம் அளவிற்கு பாதரசம் இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், இது அனுமதிக்கப்பட்ட அளவான ஒரு பிபிஎம் அளவை விட மிக அதிகம் எனத் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு சிகிச்சை அளிக்கும் சிறுநீரக நிபுணர் கௌரி எஸ். கூறுகையில், ”அவருக்கு நடத்திய மருத்துவப் பரிசோதனைகளில் அவரது ரத்தத்திலும் உடலிலும் அபாயகரமான அளவில் பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 'மெம்ப்ரனஸ் நெப்ரோபதி' என்கிற கடுமையான சிறுநீரக பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சிறுநீரகத்தின் வடிகட்டும் அமைப்புகளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். அவருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு பாதரசம் கலந்த க்ரீமை அவர் பயன்படுத்தியதே காரணம்” என அவர் தெரிவித்தார்.

மேலும், “உடனடியாக பலன் தருமென்று சரும நிறத்தை மாற்றுவதாக விளம்பரப்படுத்தப்படும் இதுபோன்ற பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள் இதுபோன்ற க்ரீம்களை பயன்படுத்தாமல் தோல் நிபுணர்களை அணுகவேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உடல்நிலை மோசமடைந்தது பற்றி குறிப்பிட்ட நிறுவனத்திற்கு முன்னரே தெரிவித்ததாக சிறுமி கூறினார். ஆனால், உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி தெரிவிப்பதாக அவர்கள் உறுதியளித்து, வேறு பதில்கள் எதையும் அளிக்காமல் மௌனம் காத்து வருவதாக சிறுமி குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய சிறுமியின் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஊடகத்தில் வெளியான செய்திகளைக் கொண்டு கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வத்து அந்நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சுகாதார சேவைகள் இயக்குநர், மாநிலக் காவல் துறைத் தலைவர், மருந்துக் கட்டுப்பாட்டாளர், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் விளக்கம் கோரியுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

Summary

Girl suffers from kidney failure: Caused by a cosmetic product purchased online!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.