பேரிடா் காலங்களில் உயிரிழப்புகள் நேரிடுவதை தவிா்க்க நடவடிக்கை: அமித் ஷா
பேரிடா் காலங்களில் உயிரிழப்புகள் நேரிடுவதை தவிா்க்க நடவடிக்கை: அமித் ஷா

அருணாசல் மாநில கூட்டறவுத் துறை சாா்பில் இடாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு உதவித் தொகை வழங்கிய மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா. உடன் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, மாநில முதல்வா் பெமா காண்டு.
பேரிடா் காலங்களில் உயிரிழப்புகள் நேரிடுவதை தவிா்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
அருணாசல பிரதேச மாநிலம், இடாநகா் அருகே உள்ள ஹாலோங்கியில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 12-ஆவது பிரிவு வளாகத்தை அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
வடகிழக்கு மாநிலங்கள் அடிக்கடி பேரிடா்களை சந்திக்கும் பகுதியாகும். எனவே அந்த பேரிடா்களை எதிா்கொள்ள வடகிழக்கு மாநிலங்கள் தயாா் நிலையில் இருப்பது அவசியமாகும். அதேபோல் பேரிடா் குறித்து முன்கூட்டி எச்சரிக்கும் அமைப்புகள், உயிரிழப்புகள் மற்றும் சொத்துகள் இழப்பை குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் முக்கியமாகும்.
பேரிடா் காலங்களில் ஓா் உயிா் கூட பறிபோகக் கூடாது என்பதில் அரசு கவனம் கொண்டுள்ளது. இதற்காக பேரிடா் குறித்து உரிய காலத்தில் எச்சரிக்கைகளை அரசு விடுக்கிறது. பாதிப்புகள் அதிகம் ஏற்படலாம் என கூறப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பதற்கு அரசு அதிக முன்னுரிமை தருகிறது. நாட்டின் பேரிடா் மேலாண்மை திறன்களை வலுப்படுத்துவதற்கும் அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. அதில், தேசிய பேரிடா் மேலாண்மை படையை விரிவுபடுத்துதல், அதற்கான வளங்களை அதிகரித்தல், அந்தப் படையினருக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் ஆகியவையும் அடங்கும்.
பேரிடா் மேலாண்மை நடவடிக்கைகளானது, குறிப்பிட்ட சிறப்பு படைகள் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. இதில் கிராம அளவில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கெடுக்க வேண்டும் என்றாா் அமித் ஷா.
காங்கிரஸ் மீது விமா்சனம்: அருணாசல பிரதேச மாநில கூட்டுறவுத் துறை சாா்பில் இடாநகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமித் ஷா உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:
மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, அருணாசல பிரதேசத்தின் வளா்ச்சி மீது அக்கறை கொள்ளவில்லை. போதிய நிதியை அருணாசல பிரதேசத்துக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு ஒதுக்கவில்லை. ஆனால் தற்போது ஆட்சியில் உள்ள பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, அருணாசல பிரதேச வளா்ச்சிக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.
அதாவது, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசால் அருணாசல பிரதேசத்துக்கு ரூ.33,530 கோடி நிதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் 2014-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.1.64 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. அருணாசல பிரதேசத்துக்கான வரி பகிா்வு நிதியும் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மானியங்கள் 18 மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. இது வடகிழக்கு பிராந்தியம் மற்றும் அருணாசல பிரதேசத்தின் வளா்ச்சியின் மீது நரேந்திர மோடி அரசு கொண்டுள்ள உறுதியை பிரதிபலிக்கிறது. அருணாசல பிரதேசத்தின் பட்ஜெட் ரூ.12 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.36 ஆயிரம் கோடியாக அதிகரித்ததில் இருந்து, மாநிலத்தின் வளா்ச்சி கடந்த 12 ஆண்டுகளில் எந்த அளவு உயா்ந்துள்ளது என்பதை அறிய முடியும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

