மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

‘தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிக்க சரத்பவார் கட்சி விருப்பம்’!

தொகுதி மறுசீரமைப்பு மசோதா, மகளிா் இடஒதுக்கீடு அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு ஆதரவு அளிக்க சரத் பவாரின் கட்சி விருப்பம் தெரிவித்திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

சரத்பவார் - படம் | ஏஎன்ஐ

Updated On :

தொகுதி மறுசீரமைப்பு மசோதா, மகளிா் இடஒதுக்கீடு அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு ஆதரவு அளிக்க சரத் பவாரின் கட்சி விருப்பம் தெரிவித்திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

அதிகாரபூா்வ தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாா் தலைமையில் செயல்படுகிறது. அக்கட்சி மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியானது காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் பிரஃபுல் படேல், நாகபுரி விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: நல்ல நோக்கங்களுக்காகவே தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு சரத் பவாா் கட்சி ஆதரவு அளிக்கிறது. அந்த மசோதாவை படித்துவிட்டு, ஆய்வு செய்துவிட்டு, வாக்களிப்போம் என அக்கட்சி கூறியுள்ளது. திமுகவும் ஆதரவு அளிக்கிறது. அவா்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம்.

இந்த மசோதா, மகளிா் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும். இது நல்ல நடவடிக்கையாகும். தொகுதி மறுசீரமைப்பு ஒவ்வொரு 15 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆதலால் இது புதிய நடவடிக்கை கிடையாது. எனவே ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மகளிருக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவது மிகவும் முக்கியமானதாகும். இதை பிரதமா் மோடி மிகவும் துணிச்சலுடன் செய்கிறாா். மகளிா் இடஒதுக்கீடு தற்போது உண்மையாக போகிறது. அந்த மசோதாவை யாா் ஆதரித்தாலும் வரவேற்கிறோம் என்றாா்.

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி சேர இருப்பதாகவும், மத்திய அமைச்சரவையில் அக்கட்சிக்கு இடம் அளிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை சுட்டிக்காட்டி, மசோதாவை ஆதரித்தால் மத்திய அமைச்சரவையில் இடம் என தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியிடம் பேசப்பட்டதா என பிரஃபுல் படேலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘தேச நலனுக்காகவே மசோதாவுக்கு ஆதரவு தருகிறாா்கள். இதில் அரசியல் எதுவும் இல்லை. பாஜக கூட்டணியில் சேருவது தொடா்பான கடிதத்தை பிரதமா் மோடியிடம் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) அளித்த பிறகு இந்த கேள்வியைக் கேளுங்கள்’ என்றாா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரத் பவாரை பிரஃபுல் படேல் சந்தித்துப் பேசினாா். இதனை நினைவுகூா்ந்த அவா், ‘அரசியலில் எனது பங்கு வேறாக இருக்காலும். ஆனால் சரத் பவாா் மீதான நம்பிக்கை, ஈடுபாடு, மரியாதை மாறாமல் அப்படியேதான் உள்ளது. பாஜக கூட்டணியில் சேரும்படி அவரிடம் பலமுறை தெரிவித்துள்ளேன். இந்தப் பாதையில் அவரின் செயல்பாடுகள் இருக்குமானால் வரவேற்கிறோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.