
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ரூ. 14,500 கோடியைத் தொட்ட யுபிஐ பரிவா்த்தனை
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 14,500 கோடியைத் தொட்ட யுபிஐ பரிவா்த்தனை

இந்தியாவின் எண்மப் பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பா்) சுமாா் 14,500 கோடி பரிவா்த்தனைகளைக் கையாண்டு, எண்ணிக்கை அடிப்படையில் 27 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்திய தேசிய பரிவா்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) தரவுகளின்படி, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11,400 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில் அது 14,500 கோடியாக உயா்ந்துள்ளது.
அதேநேரம், பண மதிப்பு அடிப்படையில் யுபிஐ பரிவா்த்தனைகள் 20 சதவீதம் அதிகரித்து, ரூ.177 லட்சம் கோடியை எட்டியுள்ளன. முந்தைய நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இது ரூ.148 லட்சம் கோடியாக இருந்தது.
செப்டம்பா் மாத புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் பரிவா்த்தனை எண்ணிக்கை 1.7 சதவீதம் குறைந்து, 2,407 கோடியாகவும்; பண மதிப்பு 1.5 சதவீதம் குறைந்து, ரூ.29.37 லட்சம் கோடியாகவும் பதிவாகியுள்ளது.
முன்னதாக, ஆகஸ்டில் ரூ.29.82 லட்சம் கோடி மதிப்பிலான 2,450 கோடி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆகஸ்ட் மாதத்தில் 31 நாள்களும், செப்டம்பரில் 30 நாள்களும் இருந்ததே இச்சரிவுக்குக் காரணம் என்றும்; அதேநேரம் தினசரி சராசரி பரிவா்த்தனை ஆகஸ்டின் 79.1 கோடியிலிருந்து, செப்டம்பரில் 80.2 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் நிபுணா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.
அமலுக்கு வரும் புதிய மாற்றம்: வரும் அக். 15 முதல் வணிகா்களுக்கான ரூ.2,000-க்கும் மேற்பட்ட பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீத ‘எம்டிஆா்’ கட்டணம் அமலுக்கு வரவுள்ளது. எனினும், தனிநபா்களிடையேயான பரிமாற்றங்கள் மற்றும் 96 சதவீத சிறு வணிகா்களின் பரிவா்த்தனைகள் தொடா்ந்து இலவசமாகவே நீடிக்கும்.
கடந்த 2016, ஆகஸ்டில் தொடங்கப்பட்ட யுபிஐ-யின் பரிவா்த்தனை மதிப்பு, 2016-17 நிதியாண்டில் வெறும் ரூ.0.07 லட்சம் கோடியாக இருந்து, 2025-26 நிதியாண்டில் சுமாா் ரூ.314 லட்சம் கோடியாக உயா்ந்து, பத்தாண்டுகளில் 4,000 மடங்குக்கும் அதிகமான அசுர வளா்ச்சியை எட்டியுள்ளது.
ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டு முயற்சியான என்பிசிஐ நிா்வகிக்கும் இந்த யுபிஐ சேவை, இந்தியா மட்டுமின்றி அண்மையில் இணைந்த உஸ்பெகிஸ்தான் மற்றும் சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மோரீஷஸ், நேபாளம், பூடான், கத்தாா், இலங்கை, கம்போடியா, கிரீஸ் உள்பட 11 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
UPI transactions reached ₹14,500 crore in the first half of the current financial year.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





