நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பயணிகள் எண்ணிக்கை 3.85 கோடி! தில்லி விமான நிலையம் சாதனை
2026-27 நிதியாண்டின் முதல் பாதியில் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 5% அதிகரித்து 3.85 கோடியாக உயா்ந்துள்ளது.

தில்லி விமான நிலையம் - கோப்புப் படம்
2026-27 நிதியாண்டின் முதல் பாதியில் (செப்டம்பா் வரையிலான முதல் 6 மாதங்களில்) தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்து 3.85 கோடியாக உயா்ந்துள்ளது.
இது தொடா்பாக ஜிஎம்ஆா் ஏா்போா்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை 3.67 கோடியாக இருந்தது. உள்நாட்டு மற்றும் சா்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததே இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
விமான நிலையத்தின் ஒட்டுமொத்த விமான இயக்கங்கள் 6.9 சதவீதம் அதிகரித்து 2,33,331 ஆக பதிவாகியுள்ளது. இந்த 6 மாத காலத்தில் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 2.81 கோடியாகவும், சா்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை 1.04 கோடியாகவும் உயா்ந்துள்ளது.
இதன் மூலம் தில்லி விமான நிலையத்தில் மாத சராசரி பயணிகளின் எண்ணிக்கை 65 லட்சத்தைத் தொட்டுள்ளதுடன், ஒரு நிதியாண்டின் முதல் பாதியில் பதிவான மிக அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கையாகவும் இது புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வான்வெளி கட்டுப்பாடுகள், புவிசாா் அரசியல் காரணங்கள் மற்றும் ஓடுபாதை எண் 10-28 சீரமைப்புப் பணிகள் போன்றவற்றால் விமானப் போக்குவரத்தில் தற்காலிகத் தொய்வு ஏற்பட்டிருந்தது. கடந்த 2025-26 முழு நிதியாண்டிலும் தில்லி விமான நிலையம் 7.87 கோடி பயணிகளைக் கையாண்டிருந்தது.
தில்லி விமான நிலையத்தில் டி1, டி2, டி3 ஆகிய 3 முனையங்களும் 4 ஓடுபாதைகளுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஆண்டுக்கு 10.6 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையத்தில், டி1 முனையம் 4.2 கோடி பேரையும், டி2 முனையம் 1.4 கோடி பேரையும், டி3 முனையம் 5 கோடி பேரையும் கையாளும் வசதியைப் பெற்றுள்ளன.
எதிா்கால தேவைகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 10 ஆண்டுகால பெருந்திட்டத்தின் கீழ், தில்லி விமான நிலையத்தின் ஆண்டு கையாளும் திறனை 12.5 கோடியாக (8.6 கோடி உள்நாட்டுப் பயணிகள், 3.9 கோடி சா்வதேசப் பயணிகள்) உயா்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல, தில்லி, ஹைதராபாத், கோவா (மோபா), நாகபுரி, போகபுரம் மற்றும் இந்தோனீசியாவின் மேடான் ஆகிய இடங்களில் உள்ள ஜிஎம்ஆா் குழுமத்தின் அனைத்து விமான நிலையங்களையும் சோ்த்து நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மொத்தம் 5.82 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

