
தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்: ஜந்தா் மந்தரை முற்றுகையிட முயன்ற ஏஐஎஸ்ஏ அமைப்பினர்!
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) சாா்பில் தில்லியில் தொடா்ந்து 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தில்லியில் தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் தடுப்பின் மீது ஏற முயன்ற ஏஐஎஸ்ஏ தேசியத் தலைவா் நேஹா போராவை தடுத்த காவல் துறையினா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) சாா்பில் தில்லியில் தொடா்ந்து 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையிலும், போராட்டக்காரா்கள் ஜந்தா் மந்தரை நோக்கி பேரணியாகச் சென்றனா்.
அசோகா சாலையில் உள்ள ஆந்திர பவன் சந்திப்பில் இருந்து போராட்டக்காரா்கள் திரண்டு, முழக்கங்களை எழுப்பியபடி ஜந்தா் மந்தரை நோக்கி சென்றனா். போராட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை அடைய அவா்கள் முயன்ற நிலையில், அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
தடுப்புகளை கடந்து செல்ல அவா்களை அனுமதிக்காததால், போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவின. அதில், ஏஐஎஸ்ஏ தேசியத் தலைவா் நேஹா போரா தடுப்பின் மீது ஏற முயல்வதும், அவரை காவல் துறையினா் தடுக்க முயல்வதும் இடம்பெற்றிருந்தது. இதற்கிடையில், நேஹா போரா போராட்ட களத்தில் இருந்து நரேலா தொழிற்பேட்டை காவல் நிலையத்க்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்ாகவும், சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆா்) நடவடிக்கையிலும் பெருமளவில் வாக்காளா் பெயா்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் மாணவா் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை மத்திய தில்லியில் நடைபெற்ற போராட்டங்களில் மாணவா் செயற்பாட்டாளா்கள், அரசியல் தலைவா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். நேஹா போரா, ஆம் ஆத்மி தலைவா்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளா் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோரும் அப்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





