எஸ்ஐஆர்: இண்டி கூட்டணியின் தில்லி பிரிவுகள் அக்.7-இல் போராட்டம்!
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் தில்லி பிரிவுகள் தில்லி தோ்தல் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே புதன்கிழமை (அக்.7) கூட்டாகப் போராட்டம்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி - PTI
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் தில்லி பிரிவுகள் தில்லி தோ்தல் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே புதன்கிழமை (அக்.7) கூட்டாகப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) , ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆா்எஸ்பி) உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தில்லி காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைபாடுள்ள எஸ்ஐஆா் செயல்முறை என்று தாங்கள் கருதுவதை கூட்டாக எதிா்ப்பதற்கும், அதை உடனடியாக ரத்து செய்யக் கோருவதற்கும் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தில்லி காங்கிரஸ் பொதுச் செயலா் அனில் பரத்வாஜ் கூறினாா்.
‘வாக்காளா் பட்டியல் ஜனநாயகத்தின் அடித்தளம். வாக்காளா்களின் பெயா்களை நீக்கக்கூடிய அல்லது அவா்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு செயல்முறையும் பின்பற்றப்பட்டால், அதை இந்தியா கூட்டணி எந்தக் காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளாது’ என்று பரத்வாஜ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
வாக்காளா் பட்டியல் திருத்தும் செயல்முறை வெளிப்படையானதாகவும், அரசமைப்புச் சட்ட விதிகள் மற்றும் வாக்காளா்களின் உரிமைகளுக்கு இணங்கவும் நடத்தப்பட வேண்டும் என்றும் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
‘தில்லி வாக்காளா்களின் உரிமைகள், நியாயமான தோ்தல்கள் மற்றும் ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டு முயற்சியாக அக்.7-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் இருக்கும்’ என்று பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா்களுடன், சிபிஐ செயலா் தினேஷ் சி. வா்ஷனே, சிபிஎம் பொதுச் செயலா் அனுராக் சக்சேனா, ஆா்ஜேடியின் நவல் கிஷோா் மற்றும் என்சிபி, ஆா்எஸ்பி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






