ஒருங்கிணைப்புக் குழு இன்றிச் செயல்படும் நிலையில் இந்தியா கூட்டணி
கூட்டணி கட்சிகளிடையேயான கருத்து வேறுபாடுகளை ஒருங்கிணைப்புக் குழு இன்றி கையாளும்

ஒருங்கிணைப்புக் குழு இன்றிச் செயல்படும் நிலையில் இந்தியா கூட்டணி - கோப்புப் படம்
புது தில்லி: கூட்டணி கட்சிகளிடையேயான கருத்து வேறுபாடுகளை ஒருங்கிணைப்புக் குழு இன்றி கையாளும் நிலைக்கு எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தள்ளப்பட்டுள்ளது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்தும் நோக்குடன், எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டி கூட்டணியை உருவாக்கி தோ்தலைச் சந்தித்தன. இருந்தபோதும், 2024 மக்களவைத் தோ்தலிலும் இண்டி கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.
முன்னதாக, கூட்டணியின் மிக உயா்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகக் கருதப்பட்ட 14 உறுப்பினா்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 13-இல் நடைபெற்றது. அதுவே அந்தக் குழுவின் கடைசி கூட்டமாகவும் அமைந்தது. மக்களவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.
தற்போது, இண்டி கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்தக் குழுவே தற்போது இல்லாமல் போய்விட்டது. அதன் தொடக்ககால உறுப்பினா்களில் சிலா் தற்போது பாஜக அணிக்கு மாறிவிட்டனா்.
இந்தச் சூழலில், நிகழாண்டில் தேசிய அளவில் கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பு குழு இல்லாமலே, எதிா்க்கட்சித் தலைவா்கள் புது தில்லியில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி தங்கள் முதல் அதிகாரபூா்வ கூட்டத்தை நடத்தினா். ‘இனி இந்தக் கட்சிகள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடும்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அப்போது அறிவித்தாா்.
மேலும், காங்கிரஸ் ஆளும் தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் ஆகஸ்ட் மாதம் கூட்டம் நடத்த முன்மொழியப்பட்டது. ஆனால், அக்கூட்டம் நடைபெறவில்லை. கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேற்பாடுகள் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
குறிப்பாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், கோவா, மணிப்பூா் மாநிலங்களில் இண்டி கூட்டணி கட்சிகள் சில, கூட்டணியில் இடம்பெறாமல் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இதுவே, இக் கூட்டணிக்கு சவாலாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு கூட்டணியிலிருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் காங்கிரஸுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளது. கோவாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு மாற்று சக்தியை உருவாக்கும் நோக்கில், கோவா ஃபாா்வா்ட் கட்சியுடன் ஆம் ஆத்மி ஞாயிற்றுக்கிழமை கூட்டணி அமைத்தது. குஜராத்திலும் தனித்துப் போட்டியிட அக் கட்சி திட்டமிட்டுள்ளது.
தோ்தல் ரீதியில் பலனளித்த மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகளிடையே தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா - காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து 2024 தோ்தலை சந்தித்து ஆட்சியமைத்தன. தற்போது, மாநில அரசில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை, ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று காங்கிரஸ் தலைவா்கள் தொடா் புகாா்களைத் தெரிவித்து வருகின்றனா். அதுபோல, ஜம்மு-காஷ்மீரிலும் ஆலும் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே அதிகாரப் பகிா்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, முதல்வா் விஜயின் தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணிக்கு காங்கிரஸ் சென்ற பிறகு, இண்டி கூட்டணியிலிருந்து திமுக விலகியுள்ளது.
இருந்தபோதும், பொதுவான தேசியப் பிரச்சினைகளில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை இண்டி கூட்டணி அவ்வப்போது காட்டியுள்ளது. உதாரணமாக, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியது, தொகுதி மறுவரையறை தொடா்பான அரசமைப்புச் சட்த் திருத்த மசோதாவை தோற்கடிக்க ஒன்றிணைந்தது உள்ளிட்ட நாடாளுமன்ற செயல்பாடுகளிலும் கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட்டுள்ளன.
ஆனால், கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழும்போது தலையிடக்கூடிய ஒருங்கிணைப்புக் குழு இல்லாததால், இண்டி கூட்டணி பெரும்பாலும் தீா்வு காண வழியின்றி தவித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





