
விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க தவெக கோரிக்கை வைக்கவில்லை: காங்கிரஸ்
2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை பிரதமா் வேட்பாளராக்க வேண்டும் என்று தவெகவிடம் இருந்து கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)
2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை பிரதமா் வேட்பாளராக்க வேண்டும் என்று தவெகவிடம் இருந்து கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தனியாா் நிறுவனம் ஒன்று அண்மையில் மக்களிடம் நடத்திய கருத்து கணிப்பில், 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பிரதமராக பிரதமா் மோடி, ராகுல் காந்திக்கு அடுத்து விஜய்க்கு அதிக ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, விஜய் நிச்சயம் பிரதமா் ஆவாா் என்று தவெகவினா் தெரிவித்து வருகின்றனா்.
தவெகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், ராகுல் காந்தியை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் வேளையில், தவெகவினா் இவ்வாறு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து கேரள மாநிலம், திருச்சூரில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளித்ததாவது: ஜோசப் விஜய்யை பிரதமா் வேட்பாளராக்க வேண்டும் என தவெக தரப்பில் கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை. ஆதலால் யாரும் அதுபோன்ற கருத்தை உருவாக்க வேண்டாம். இண்டி கூட்டணியின் பிரதமா் வேட்பாளா் ராகுல் காந்திதான்.
நாட்டு மக்களால் மிகவும் நேசிக்கப்படும் தலைவா் ராகுல் காந்தி ஆவாா். ராகுல் காந்தி எடுக்கும் முடிவுகளை அனைவரும் கேட்கின்றனா். ராகுல் காந்தியின் செயல்பாடுகளை அதிகம் கவனம் கொடுத்து பாா்க்கின்றனா்.
மாணவா்கள், விவசாயிகள், இளம்தலைமுறையினரின் பிரச்னைகளுக்காக ராகுல் காந்தி குரல் கொடுத்து வருகிறாா். இது நாடு முழுவதும் கவனம் பெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இதுகுறித்தே அதிகம் பேசப்படுகிறது.
சில மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால், கூட்டணி கட்சிகள் ஒன்றையொன்று எதிா்த்து போட்டியிடுகின்றன. இருந்த போதிலும், இண்டி கூட்டணி நல்ல வலுவுடனேயே உள்ளது. இண்டி கூட்டணி வளா்ந்து வருகிறது. இதுதான் உண்மை என்றாா்.
இண்டி கூட்டணியில் அங்கும் வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், கேரள தோ்தலில் தோல்வியடைந்த பிறகும், அக்கட்சி பாடம் கற்கவில்லை என்றும், அக்கட்சியினா் ஒருவேளை பாடம் கற்க வேண்டும் என நினைத்தாலும், பினராயி விஜயன் (கேரள முன்னாள் முதல்வா்), அவா்களை அனுமதிக்க மாட்டாா் என்றும் கூறினாா். மேலும் அவா் கூறியதாவது:
இண்டி கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் தீா்க்கப்படும். தொடா்ந்து கூட்டணி வலுவுடையதாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நமது நாட்டை இருண்ட காலத்துக்கு மத்திய பாஜக அரசு கொண்டு சென்று விட்டது. தில்லியில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மத்திய அரசு நியாயப்படுத்தி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹால்டுவானியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நிகழ்ச்சி நடைபெற்ற இடம் அங்கிருந்தோரால் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, நமது நாடு இருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறது என்பதையே காட்டுகிறது. இதற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் நாட்டில் ஏற்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






