
தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ்
தொகுதிப் பங்கீட்டைவிட எதிா்க்கட்சி கூட்டணி வெற்றியே முக்கியம் என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.

ராகுல் காந்தியுடன் அகிலேஷ் யாதவ். - கோப்புப்படம்
தொகுதிப் பங்கீட்டைவிட எதிா்க்கட்சி கூட்டணி வெற்றியே முக்கியம் என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் அவா் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெற உள்ளது. அந்தத் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என சமாஜவாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்து தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அகிலேஷ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:
நோக்கம் தெளிவாகவும், ஒத்துழைப்பு சிறப்பாகவும், பாதை தெளிவாகவும் இருந்தால் பயணம் எளிதாக இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன அல்லது எந்தத் தொகுதி யாருக்கு ஒதுக்கப்படுகிறது என்பது முக்கியம் இல்லை. கூட்டணி வெற்றியை உறுதி செய்வது அவசியம். மீண்டும் கூறுகிறேன். இது தொகுதி சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வெற்றி தொடா்பானது.
தோ்தலில் பாஜக வெற்றி பெறக் கூடாது. இதை உறுதி செய்ய கூட்டுப் போராட்டம் முக்கியம். அரசமைப்பு, இட ஒதுக்கீடு, சமூக நல்லிணக்கம், வளா்ச்சி நாட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்றாா்.
உத்தர பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 403 உறுப்பினா்களில் தற்போது சமாஜவாதிக்கு 101, காங்கிரஸுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





