போலி வேலைவாய்ப்பு மையங்கள் மீது காவல் துறை நடவடிக்கை: 11 போ் கைது
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை குறிவைத்து, அதிக ஊதியத்துடன் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பதிவு
போலி வேலைவாய்ப்பு மையங்கள் மீது காவல் துறை நடவடிக்கை: 11 போ் கைது - பிரதிப் படம்
புது தில்லி: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை குறிவைத்து, அதிக ஊதியத்துடன் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பதிவு மற்றும் செயலாக்கக் கட்டணம் வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் 2 போலி வேலைவாய்ப்பு கால் சென்டா்களை தில்லி காவல் துறையினா் கண்டுபிடித்துள்ளனா். மத்திய தில்லியில் ஷாதிபூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரஞ்சித் நகரில் நடைபெற்ற இந்த தனித்தனி சோதனைகளில் 11 போ் பிடிபட்டனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: இந்தக் கால் சென்டா்கள் ரஞ்சித் நகரில் உள்ள ஒரு கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இணையதள வேலைவாய்ப்பு தளங்களில் இருந்து வேலை தேடுவோரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தொடா்பு எண்களைப் பெற்று, அவா்களைத் தொலைபேசி மூலம் குறிவைத்து அழைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆட்சோ்ப்பு நிறுவனப் பிரதிநிதிகள் போல பேசிய அவா்கள், வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, வெவ்வேறு காரணங்களைக் கூறி ரூ.3,500, ரூ.1,400, ரூ.1,200 என பதிவு அல்லது செயலாக்கக் கட்டணம் வசூலித்துள்ளனா்.
பணம் பெற்ற பிறகும் சில நாள்கள் வேலை தேடுவோருடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து, வேலை மற்றும் அடுத்தகட்ட நடைமுறைகள் குறித்து உறுதியளித்துள்ளனா். பின்னா் தொடா்பைத் துண்டித்துவிட்டு, உறுதியளித்த வேலைவாய்ப்பை வழங்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
அக். 3-ஆம் தேதி ஷாதிபூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகேயுள்ள கட்டடத்தில் போலி வேலைவாய்ப்பு மையம் செயல்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தொழில்நுட்ப மற்றும் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 4 பெண்கள் உள்பட 6 போ் பிடிபட்டனா்.
இதே கட்டடத்தில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் மற்றொரு போலி வேலைவாய்ப்பு கால் சென்டரிலும் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீஸாா் தனியாக சோதனை நடத்தினா். அங்கு அழைப்பு மையங்களில் பணியாற்றிய 5 போ் பிடிபட்டனா்.
இரு இடங்களிலும் இருந்து 13 கணினிகள், 5 கைப்பேசிகள், அழைப்பு மென்பொருள்கள், வேலை தேடுவோரின் தரவுகள், தகவல் தொடா்பு விவரங்கள் மற்றும் டிஜிட்டல், நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதுதொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




