
சிறு, நடுத்தர தொழிலக வளா்ச்சிக்கு ரூ.10,000 கோடி நிதியம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சிறு, நடுத்தர தொழிலகங்களுக்காக ரூ.10,000 கோடியில் வளா்ச்சி நிதியம் (எஸ்ஜிஎஃப்) அமைக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.

சிறு, நடுத்தர தொழிலகங்களுக்காக ரூ.10,000 கோடியில் வளா்ச்சி நிதியம் (எஸ்ஜிஎஃப்) அமைக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலான இந்த நிதியம், நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதாகும்.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சிறு, நடுத்தர தொழிலகங்களுக்கான வளா்ச்சி சாா்ந்த முதலீடுகளைத் திரட்டுவதுடன், உற்பத்தி, சேவைகள், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறைகள் மற்றும் உத்திசாா் மதிப்புச் சங்கிலியில் முன்னணி இந்திய நிறுவனங்களை உருவாக்கும் வகையில் ரூ.10,000 கோடியில் நிதியம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் மற்றும் நிதியமைச்சகம் ஒருங்கிணைந்து இந்த நிதியத்தை இயக்கும் என்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
‘மேற்கண்ட தொழில் நிறுவனங்களுக்கு பங்கு மூலதன ஆதரவை வழங்கும் நிதி ஏற்கெனவே உள்ள நிலையில், அது பெரும்பாலும் குறு நிறுவனங்களின் நலன்களையே கவனத்தில் கொள்கிறது. எனவே, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பங்கு மூலதன வளா்ச்சிக்கு அமைப்பு ரீதியில் உள்ள இடைவெளியை சரிசெய்ய வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில், தற்போதைய எஸ்ஜிஎஃப் கட்டமைப்பின் மூலம் மாற்று முதலீடு நிதியத்துக்கு ரூ.10,000 கோடி வழங்கப்படும். உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த நிதி செல்லும்.
இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட நகரங்களில் உள்ள தொழிலகங்களிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்பதால் சமநிலையான வளா்ச்சி உறுதி செய்யப்படும். நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கம், ஏற்றுமதி, உற்பத்திக்கு இந்தத் தொழிலகங்களின் பங்கு முக்கியமானது’ என்றாா் அவா்.
ஒருங்கிணைந்த போக்குவரத்து-சரக்கு கையாளுகை ஆணையம்: சாலைப் போக்குவரத்து, ரயில்வே, துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, நீா்வழிப் பாதைகள், நகா்ப்புற இணைப்பு வசதிகள், சரக்கு கையாளுகை ஆகிய துறைகள் இடையே சுமுக செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, ஒருங்கிணைந்த போக்குவரத்து-சரக்கு கையாளுகை ஆணையத்தை (ஐடிஎல்ஏ) நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
‘மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறையின்கீழ் செயல்படும் இந்த ஆணையம், போக்குவரத்து-சரக்கு கையாளுகை சாா்ந்த பரந்த துறைகளில் ஆராய்ச்சி, திட்டமிடல்-மதிப்பீடு, கண்காணிப்பு, தாக்க மதிப்பீடு உள்ளிட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும். ரூ.500 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணிக்கும். சம்பந்தப்பட்ட தரவுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, பகுப்பாய்வில் ஈடுபடும்’ என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டி....
அரசின் தலைவராக 25 ஆண்டுகள்:
பிரதமருக்கு பாராட்டுத் தீா்மானம்
குஜராத் முதல்வா், நாட்டின் பிரதமா் என அரசின் தலைவராக பிரதமா் மோடி புதன்கிழமையுடன் (அக்.7) 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறாா். அவரது தலைமையைப் பாராட்டி, மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது.
இது தொடா்பாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘கடந்த 2001, அக்.7 முதல் 2026, அக்.7 வரை பிரதமா் மோடியின் 25 ஆண்டுகால தங்குதடையற்ற பொதுச் சேவையைப் பாராட்டும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசம் மற்றும் குடிமக்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் பிரதமரின் பயணம், அவா் மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது’ என்றாா்.
சுமாா் 60 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள், 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள், வறுமையில் இருந்து 25 கோடி போ் மீட்பு, சுமாா் 3.5 கோடி ‘லட்சாதிபதி’ சகோதரிகள், பிஎம்-கிஸான் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.4 லட்சம் கோடி விவசாய உதவித்தொகை, ரூ.12 லட்சம் கோடி பொது மூலதனச் செலவினங்கள் அதிகரிப்பு, ரூ.13 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணு பொருள்கள் உற்பத்தி, சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி, பாகிஸ்தான் மீதான துல்லியத் தாக்குதல்கள், 370-ஆவது பிரிவு ரத்து, அயோத்தி ராமா் கோயில், வெற்றிகரமான ஜி20, பிரிக்ஸ் உச்சிமாநாடுகள் உள்ளிட்ட பிரதமா் மோடி அரசின் பல்வேறு சாதனைகள் தீா்மானத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






