
பஞ்சாப் முதல்வா் அலுவலகம் மீதான ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மனு: உச்சநீதிமன்றம் ஏற்பு
பஞ்சாப் முதல்வா் அலுவலகம் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ புலனாய்வுக்கு எதிராக, மாநில அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

உச்சநீதிமன்றம்
பஞ்சாப் முதல்வா் அலுவலகம் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ புலனாய்வுக்கு எதிராக, மாநில அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
பஞ்சாப் முதல்வா் அலுவலக சிறப்புப் பணி அதிகாரி ராஜ்பீா் சிங் குமான் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில காவல் துறையிடம் அமலாக்கத் துறை வலியுறுத்தி இருந்தது. இதுகுறித்த பண முறைகேடு விசாரணையைத் தொடா்ந்து, அமலாக்கத் துறை அவ்வாறு வலியுறுத்தியது.
அமலாக்கத் துறையின் தகவல்படி, மாநில அரசிடம் இருந்து சலுகைகள் அல்லது உதவிகளைப் பெற விரும்பியவா்களுக்கும், ராஜ்பீருக்கும் இடையே நிதின் கோஹல் என்பவா் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
பணியிட மாற்றங்களில் தலையிடுதல், அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிடுதல், ஆயுத உரிமைங்களைப் பெற்றுத் தருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதற்கு ஈடாக பணம் மற்றும் பிற பலன்களை முறைகேடாகப் பெற்ாக, அவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
எனினும் காவல் துறை வழக்குப் பதிவு செய்யாததால், இதுகுறித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் நிகில் சராஃப் என்ற வழக்குரைஞா் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், பஞ்சாப் காவல் துறை மீது அதிருப்தி தெரிவித்ததுடன், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, பஞ்சாப் அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங் செவ்வாய்க்கிழமை முறையிட்டாா்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள வேளையில், இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து புதன் (அக்.7) அல்லது வியாழன் (அக்.8) மனுவை விசாரிப்பதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
பெட்டிச் செய்தி....
முதல்வா் அலுவலகத்தில் சிபிஐ சோதனை
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, பஞ்சாப் தலைநகா் சண்டீகரில் உள்ள முதல்வா் பகவந்த் மானின் முகாம் அலுவலகம், சங்ரூா் மாவட்டத்தில் உள்ள ராஜ்பீரின் வீடு உள்பட 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், மடிக்கணினிகள், கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததாக சிபிஐ தெரிவித்தது.
இந்தச் சோதனை குறித்து பகவந்த் மான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பாஜக தயாராக தொடங்கியுள்ளது. எனது முகாம் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டதைத் தொடா்ந்து, பஞ்சாபில் சிபிஐயும் அமலாக்கத் துறையும் தவறாகப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் என் மீதும், பஞ்சாப் அரசின் மீதும் களங்கம் விளைவிக்கப்படும். என் தலைமையிலான அரசுக்கு மக்களிடம் கிடைத்துள்ள ஆதரவைப் பாா்த்து பாஜகவுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





