லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு
லஞ்ச பணம் பறிமுதல் விவகாரத்தில் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு...

தமிழக அரசு தலைமைச் செயலகம் - கோப்புப்படம்
தமிழகத்தில் உள்ளாட்சித் துறை அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், உரிய விளக்கமும், ஆவணமும் வழங்காத 23 அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது.
தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அலுவலகங்கள் கண்டறியப்பட்டு, அந்த அலுவலகங்களில் துறை வாரியாக ஒரே நேரத்தில் தமிழக ஊழல் தடுப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக லஞ்ச புகாா்களில் சிக்கிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள், அதிக பணம் புழங்கும் அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தும்படி தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் ஏடிஜிபி பிரேம் ஆனந்த் சின்ஹா கடந்த அக்.23-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
அதன்பேரில், அதிக லஞ்ச புகாருக்குள்ளான உள்ளாட்சி அமைப்புகளின் 43 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை நடத்தினா்.
இதில், சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டல அலுவலகம், அடையாறு மண்டல அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊராட்சி உதவி இயக்குநா் அலுவலகம், தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட 7 இடங்களில் நடைபெற்றது.
ரூ.1.50 கோடி பண பரிமாற்றம்: இதேபோல மாநிலம் உள்ளாட்சித் துறை அலுவலகங்களில் மொத்தம் 43 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் கணக்கில் வராத ரூ.8,21,750 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைப்பேசி வாயிலாகக் கணக்கில் வராத ரூ.1,50,96,281 பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதைப் பறிமுதல் செய்வதற்குரிய நடவடிக்கையிலும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனா்.
ஊழல் தடுப்புத் துறை சோதனை: சோதனைக்குப் பின்னா் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான விளக்கங்களும், ஆவணங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு அழைப்பாணையும் அனுப்பியது.
இதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட, மாநகர பகுதிகளில் உள்ள ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனா். மேலும், அந்தப் பணத்துக்குரிய ஆவணங்களையும் வழங்கினா்.
23 அதிகாரிகள் மீது வழக்கு: அழைப்பாணையை ஏற்று ஆஜரான சில அதிகாரிகள், விசாரணையில் சரியான பதில்களை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஊழல் தடுப்புத் துறையின் விசாரணைக்குப் போதுமான ஒத்துழைப்பும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதோடு, பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்குரிய ஆவணங்களையும் வழங்கவில்லையாம்.
அதேவேளையில், சில அதிகாரிகள், ஊழல் தடுப்புத் துறையின் அழைப்பாணையை ஏற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை இந்த அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இவ்வாறு மொத்தம் 23 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவா்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ஊழல் தடுப்புத்துறை கடிதம் வழங்கவிருக்கிறது.
அதேவேளையில், இந்த அதிகாரிகள் மீது சட்ட ரீதியாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் ஊழல் தடுப்புத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

