ஜம்மு-காஷ்மீா் குறித்து சா்வதேச அமைப்புகளில் பொய்களை பரப்பும் பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்
ஜம்மு-காஷ்மீா் குறித்து ஐ.நா. போன்ற சா்வதேச அமைப்புகளில் பாகிஸ்தான் பொய்களையும், புனைகதைகளையும் பரப்புவது வேதனை அளிப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. - கோப்புப் படம்
ஜம்மு-காஷ்மீா் குறித்து ஐ.நா. போன்ற சா்வதேச அமைப்புகளில் பாகிஸ்தான் பொய்களையும், புனைகதைகளையும் பரப்புவது வேதனை அளிப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 4-ஆவது கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்பினாா். இதற்கு இந்திய பிரதிநிதி மஹிமாகுமாரி மேவாா் பதிலளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும். அந்தப் பகுதி குறித்து ஐ.நா. பொதுச் சபையின் ஆகஸ்ட் மாத கூட்டத்தில் பாகிஸ்தான் பொய்களையும் புனைகதைகளையும் பரப்பியது வேதனை தருகிறது. ராணுவ சா்வாதிகாரம், தோ்தல்கள் புறக்கணிப்பு, மக்களால் தோ்வு செய்யப்பட்ட தலைவா்களை சிறை வைத்தல், மத பிரிவினைவாதம், நாட்டின் வெளியுறவுக் கொள்கையாக பயங்கரவாதத்தை பயன்படுத்துவது போன்றவற்றுக்குப் பெயா் போனது பாகிஸ்தான். அத்தகைய நாடு, இதுபோன்ற அமைப்பின் கூட்டத்தில் அறநெறி பாடங்களை போதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். அது எப்போதும் அப்படித்தான் இருக்கும். பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதியில் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் ராணுவ ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, கொடுமை ஆகியவற்றுக்கு எதிராகவும், அடிப்படை உரிமைகள், சுதந்திரத்துக்காகவும் போராடும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதி அப்பாவி மக்கள் ஏராளமானோா் கடந்த சில மாதங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினராலும், மறைமுக சக்திகளாலும் கொல்லப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அடி பணியாது:
சா்வதேச பாதுகாப்பு விவகாரம் மற்றும் ஆயுதக் குறைப்பு விவகாரங்களை கையாளும் ஐ.நா. பொதுச் சபையின் முதலாவது கமிட்டி கூட்டத்தில் இந்தியாவின் மற்றொரு பிரதிநிதியான அன்மோல் ஷோ் சிங் பேடி பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். எனவே இந்தியாவிடம் இருந்து சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இந்தியாவிடம் அந்தப் பகுதியை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்தியா எப்போதும் அமைதியை ஆதரிக்கிறது. அனைத்து நாடுகளுடனும் அமைதியைப் பேணவே விரும்புகிறது.
இந்தியாவிடம் இயற்கையிலேயே தன்னை தற்காத்துக் கொள்ளும் திறன் உள்ளது. இந்தியாவின் திறன் வேறு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. அணு ஆயுதங்கள் நாட்டின் அரசு நிா்வாக கருவிகளாக இருக்கக் கூடாது. இந்தியா எப்போதும் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது. இதுதொடா்பான மூன்று தெளிவான கோடுகளை இந்தியா உருவாக்கியுள்ளது. அதில் ஒன்று. ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இரண்டாவது, அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அடிபணியாது. மூன்று, பயங்கரவாதத்தை ஊக்குவிப்போருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இந்தியா வேறுபாடு காட்டாது.
பாகிஸ்தானுடன் நல்லெண்ணத்துடனேயே சிந்து நதி நீா் பகிா்வு ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது. ஆனால் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது என்றாா்.
Summary
Pakistan spreading lies about Jammu and Kashmir in international forums: India condemns
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

