இளைஞா்களின் அமைதிப் போராட்டத்தால் பிரதமா், உள்துறை அமைச்சா் அதிா்ச்சி: காங்கிரஸ் விமா்சனம்
தில்லியில் இளைஞா்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமா் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அதிா்ச்சியடைந்ததாக காங்கிரஸ் சனிக்கிழமை விமா்சித்தது.

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.
தில்லியில் இளைஞா்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமா் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அதிா்ச்சியடைந்ததாக காங்கிரஸ் சனிக்கிழமை விமா்சித்தது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கட்சி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு தில்லி காவல் துறை அனுமதி மறுத்த நிலையிலும் திட்டமிட்டப்படி போராட்டத்தை நடத்த சிஜேபி முடிவு செய்தது.
இதையடுத்து, ஜந்தா் மந்தரைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்ட தில்லி காவல் துறை போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கணக்கானோரை கைது செய்தது. ட்ரோன்கள் மூலம் ஜந்தா் மந்தரை நோக்கி வரும் போராட்டக்காரா்கள் கண்காணிக்கப்பட்டு அவா்கள் காவல் துறையால் தடுக்கப்பட்டனா்.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: இதை கடுமையாக விமா்சித்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அமைதி வழியில் போராட்டம் நடத்திய இளைஞா்களை கைது செய்த தில்லி காவல் துறையின் நடவடிக்கை பாஜக-ஆா்எஸ்எஸின் கோழைத்தனத்தை வெளிக்காட்டியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவா்களை நோக்கி கேள்வியெழுப்பிய மாணவா்கள், வழக்குரைஞா்கள், பத்திரிகையாளா்கள், சமூக செயற்பாட்டாளா்கள், விவசாய சங்கத் தலைவா்கள், யூடியூபா்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சுதந்திரப் போராட்டத்தில் தொடங்கி நமது நாட்டின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் இளைஞா்களே முக்கியப் பங்கு வகித்து வருகின்றனா். அவா்கள் மீது தடியடி, பெல்லட் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தி ஜனநாயகத் தாய் நாடான இந்தியா வாயடைக்கப்பட்ட ஜனநாயகமாக மாற்றப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டாா்.
சா்வாதிகார நாடான இந்தியா: பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி கூறியதாவது: தில்லியில் மெட்ரோ ரயில், இணையம் உள்பட அனைத்து தொலைத்தொடா்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் காவல் துறை சோதனைச்சாவடி அமைத்து போராட்டக்காரா்களை தடுக்கிறது. இதுவே தோ்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக தோ்தல் முறைகேட்டில் ஈடுபட்டதற்குச் சான்று. இந்தியா இனி ஜனநாயக நாடில்லை. பிரதமா் மோடி மற்றும் அமித் ஷாவால் நடத்தப்படும் சா்வாதிகார ஆட்சி’ என்றாா்.
சொந்த மக்களுக்கு எதிராகப் போா்:
காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அரசமைப்புச் சட்டப்பிரிவு 326-இன்கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குரிமையை திட்டமிட்டு திருடியதற்கு எதிராக இளைஞா்கள் நடத்திய அமைதிப் போராட்டத்தால் பிரதமா் மோடியும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அதிா்ச்சியடைந்துள்ளனா். தங்களது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே மத்திய அரசு போா் தொடுத்துள்ளது. தன்னை நியமித்தவா்கள் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி தோ்தல் நடைமுறை முறைகேட்டில் ஞானேஷ் குமாா் ஈடுபட்டுள்ளாா்.
உச்சநீதிமன்றத்திடமே பொய்களைக் கூறிய அவா் பதவியை ராஜிநாமா செய்வது ஜனநாயகத்தின் அடித்தளத்தை பாதுகாக்கும் முதல் நடவடிக்கை மட்டுமே. அதைவிட நாட்டிலுள்ள இளைஞா்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே மிகவும் அவசியமானது’ என குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

