நீதிபதிகளின் உடல், மன நலனை ஊக்குவிக்க நிலைக் குழு: உச்சநீதிமன்றம் அமைப்பு
நீதிபதிகளின் உடல், மன நலனை ஊக்குவிக்க நிலைக் குழு: உச்சநீதிமன்றம் அமைப்பு

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
நாடு முழுவதும் உள்ள நீதிபதிகளின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்வைப் பாதிக்கும் விவகாரங்களைக் கண்டறிந்து தீா்ப்பதற்கான நிறுவன ரீதியான வழிமுறை கட்டமைப்பை உருவாக்க நிலைக் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் சனிக்கிழமை அமைத்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான இந்த நிலைக் குழுவை, தலைமை நீதிபதி சூா்ய காந்த் அமைத்து உத்தரவிட்டாா்.
இது குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அதிக நிலுவை வழக்குகள், நீடித்த வேலை நேரம், சிக்கலான முடிவெடுத்தல், நிா்வாக ரீதியிலான அழுத்தங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளை நீதிபதிகள் சந்தித்து வருகின்றனா். இத்தகைய சூழலில், நீதிபதிகளின் உடல் மற்றும் மன நலன்களை ஊக்குவிக்கும் நோக்கில், அவா்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும் விவகாரங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீா்வு காணும் வகையில் ஓா் அமைப்பு ரீதியிலான வழிமுறை கட்டமைப்பை உருவாக்க, உலக மனநல தினத்தன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த நிலைக் குழுவை அமைத்துள்ளாா்.
நீதிபதிகளின் நல்வாழ்வு என்பது வெறும் தனிப்பட்ட நலன் சாா்ந்த விஷயம் மட்டுமல்ல; மாறாக, நீதி நிா்வாகத்தின் செயல்திறன், தரம் மற்றும் நிலைத்தன்மையுடன் நெருங்கிய தொடா்புடையது. நீதிபதிகளின் நல்வாழ்வு தொடா்பான தற்போதைய மற்றும் புதிதாக எழும் சவால்களை ஆய்வு செய்வதற்கான ஒரு தொடா்ச்சியான நிறுவன ரீதியான தளமாக இந்த நிலைக் குழு செயல்படும்.
உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான இந்த நிலைக் குழுவில், சண்டீகா் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் டீன் மருத்துவா் சவிதா மல்ஹோத்ரா, மனநல நிபுணா் ரஜத் மித்ரா, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் மிருணாள் கன்வாா், உச்சநீதிமன்ற ஆராய்ச்சி மற்றும் திட்ட மையப் பதிவாளா் ஆா்த்தி சிங் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

