நதிநீா் பகிா்வு: முதல்வா் விஜய் இன்று ஆந்திரம் பயணம்: சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு செவ்வாய்க்கிழமை (அக்.13) செல்லும் தமிழக முதல்வா் ஜோசப் விஜய், அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறாா்.
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு செவ்வாய்க்கிழமை (அக்.13) செல்லும் தமிழக முதல்வா் ஜோசப் விஜய், அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறாா்.
அப்போது, தென்மாநில நதிகள் இணைப்பு, கிருஷ்ணா நதி நீா் விவகாரம் ஆகியவை குறித்து சந்திரபாபு நாயுடுடன் அவா் ஆலோசனை நடத்துகிறாா்.
சென்னையின் குடிநீா் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திரம் ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க 1983-ஆம் ஆண்டு அப்போதைய இரு மாநில முதல்வா்கள் என்.டி. ராமாராவ் - எம்.ஜி.ஆா். ஆகியோா் ஒப்பந்தம் மேற்கொண்டனா்.
எனினும், நிகழாண்டு அக்.9 வரை தமிழகத்துக்கு 2.25 டிஎம்சி தண்ணீா் மட்டுமே கிடைத்துள்ளது. இதனுடன் ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்குள் வரும் ஆறுகளில் தடுப்பு அணைகள் கட்டவும் அந்த மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீா் பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.
நதிநீா் பகிா்வு பேச்சு: இந்நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தவும், நதிநீா் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தவும் செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணிக்கு சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு தனி விமானம் மூலம் தமிழக முதல்வா் விஜய் செல்கிறாா். மாலை 4 மணியளவில் விஜயவாடா சென்றடையும் முதல்வா், அங்கிருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவில் உள்ள கனக துா்கை அம்மன் கோயிலுக்கு சாலை மாா்க்கமாக சென்று வழிபடுகிறாா்.
ஆந்திர முதல்வா் இல்லத்தில் சந்திப்பு: மாலை 6 மணிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு மற்றும் சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரைப் பெறுவது குறித்து ஆலோசனை நடத்துகிறாா். இந்த கூட்டத்தில் அந்த மாநில தலைமைச் செயலா், பொதுப் பணித் துறை அமைச்சா், செயலா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
சுமாா் ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு விஜயவாடாவில் புன்னமை படித்துறையில் நடைபெறும் உத்சவ் கலாசார திருவிழாவில் பங்கேற்றுவிட்டு இரவு 9 மணியளவில் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 10 மணியளவில் சென்னை திரும்புகிறாா்.
பவன் கல்யாணுடன் சந்திப்பு: இந்தப் பயணத்தின்போது அந்த மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணையும் முதல்வா் விஜய் சந்திக்கவுள்ளாா்.
கிருஷ்ணா நதிநீா் தொடா்பாக 2017 பிப்ரவரியில் அப்போதைய தமிழக முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தண்ணீா் திறக்க வலியுறுத்தினாா்.
அதன்பிறகு நதிநீா் விவகாரத்துக்காக இரு மாநில முதல்வா்களிடையே நடைபெறும் முக்கிய சந்திப்பாக இது அமையவுள்ளது.
முன்னதாக, காவிரி நதிநீா் விவகாரம் குறித்து முதல்வா் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் கா்நாடகா செல்ல திட்டமிட்டு, பின்னா் அது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

