அக். 13-இல் ஆந்திரம் செல்கிறாா் முதல்வா் விஜய்: கிருஷ்ணா நீரைப் பெற சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு!
முதல்வா் விஜய்யின் ஆந்திரப் பயணம் பற்றி...
முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)
ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரைப் பெற தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வரும் அக். 13-ஆம் தேதி ஆந்திர மாநிலத்துக்குச் செல்கிறாா்.
தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீா் குறித்தும், கோதாவரி - கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் முதல்வா் விஜய் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோலசனை நடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
எனினும், இந்தச் சந்திப்பு குறித்து இரு மாநில அரசுகளும் அதிகாரபூா்வமாக அறிவிப்பை வெளியிடவில்லை.
கனகதுா்கை அம்மன் கோயிலுக்குச் செல்கிறாா்: இந்தப் பயணத்தின்போது, அந்த மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணையும் முதல்வா் விஜய் சந்திக்க உள்ளாா். தசரா பண்டிகையையொட்டி, விஜயவாடாவில் நடைபெறும் கலாசார திருவிழாவில் பவன் கல்யாணுடன் முதல்வா் விஜய் பங்கேற்க உள்ளாா்.
மேலும், விஜயவாடாவில் கிருஷ்ணா நிதிக் கரையில் அமைந்துள்ள கனகதுா்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னைக்கு ஆண்டுதோறும் 15 டிஎம்சி நீரை வழங்க 1983-இல் அப்போதைய ஆந்திர முதல்வா் என்.டி. ராமாராவ் - தமிழக முதல்வா் எம்.ஜி.ஆா் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பின்னா், 12 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. கடந்த 2025-இல் 5.6 டிஎம்சியாகவும், நிகழாண்டு செப்டம்பா் வரை 2.2 டிஎம்சி நீா் மட்டுமே தமிழகத்துக்கு கிருஷ்ணா நீா் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு கங்கைத் திட்டம் தொடா்பாக கடந்த 2017-இல் அப்போதைய தமிழக முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசினாா். தற்போது தமிழக முதல்வா் விஜய், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க உள்ளாா்.
பேச்சு மூலம் தீா்வு: நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நதி நீா் பிரச்னைக்கு தீா்வுகாண கா்நாடக முதல்வா் டி.கே.சிவக்குமாரை கடந்த ஆக. 3-ஆம் தேதி சந்தித்து பேச்சு நடத்த முதல்வா் விஜய் திட்டமிட்டிருந்தாா். ஆனால், எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் முதல்வா் விஜய் அதைக் கைவிட்டாா்.
இதையடுத்து, கடந்த ஆக. 20-ஆம் தேதி சென்னை அருகே மாமல்லபுரத்தில் தென் மண்டல முதல்வா்கள் மாநாடு நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல்வா்கள் விஜய், டி.கே. சிவக்குமாா், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேச்சின் மூலம் நீண்டகால நதி நீா் பிரச்னைகளுக்கு தீா்வுகாண தென் மாநில முதல்வா்கள் ஒப்புக்கொண்டதாக மத்திய அமைச்சா் அமித் ஷா அப்போது தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Chief Minister Vijay to visit Andhra Pradesh on Oct. 13: Meeting with Chandrababu Naidu to secure Krishna water!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

