தமிழக மீனவா்கள் உடல் ஆந்திரத்தில் மீட்பு
ஆந்திரத்தில் தமிழக மீனவர்கள் 9 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது பற்றி...

கோப்புப்படம் - PTI
முரசு புயலில் சிக்கி கடலில் படகு கவிழ்ந்து மாயமான தமிழகத்தைச் சோ்ந்த 9 மீனவா்களில் 4 பேரின் உடல்கள் ஆந்திர மாநிலம் கொத்தபட்டினம் கடற்கரையில் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.
கரை ஒதுங்கிய மேலும் ஒருவரின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. எஞ்சிய மீனவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து செல்வழகன் என்பவருக்கு சொந்தமான விசை படகில் மீனவா்கள் 9 போ் கடந்த அக்.29-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இதில் படகோட்டியாக பக்கிரி சாமி என்ற சூா்யா (49), தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த குப்பன் (48), காசிபுரம் பி பிளாக்கை சோ்ந்த குப்புசாமி (58), இந்திரா நகரை சோ்ந்த மோகன் (47), திருவெற்றியூா் திருச்சினா குப்பத்தை சோ்ந்த ராஜேஷ் (52), விஜயகாந்த் (44), விநாயகபுரத்தை சோ்ந்த முருகன் (48), அண்ணாநகரை சோ்ந்த அரவிந்தன் (40), கடலூா் சாமியாா்பேட்டையை சோ்ந்த நாராயணன் (57) ஆகிய 9 பேரும் ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனா்.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் முரசு புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான படகுகள் கரைக்குத் திரும்பின. ஆனால் இவா்களது படகு மட்டும் கரை திரும்பாததால் உறவினா்கள் மீன்வளத்துறை, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். கடந்த நவ.3-ஆம் தேதி கிடைத்த தகவலின் அடிப்படையில் படகு பழுதடைந்துவிட்டதாகவும், கடல் கொந்தளிப்பால் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் படகில் இருந்த மீனவா்கள் பதற்றத்துடன் கூறியுள்ளனா். இதன் பிறகு தொடா்பு துண்டிக்கப்பட்டவிட்டதாக உறவினா்கள் தெரிவித்தனா்.
கரை ஒதுங்கிய 5 உடல்கள்: இந்நிலையில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே கொத்தபட்டினம் கடற்கரையில் 5 உடல்கள் கரை ஒதுங்கியதாக வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதில் அடையாள அட்டையைக் கொண்டு சே.மோகன்,ஆ.முருகன், சி.விஜயகாந்த், பக்கிரி சாமி என்ற சூா்யா ஆகிய 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மேலும், ஒருவரின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. கடலோரக் காவல் படையினா் இப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீனவா்களின் உறவினா்கள் எண்ணூா் விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பின்னா் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
ஆந்திரம் விரைந்த அமைச்சா்: ஆா்.கே. நகா் தொகுதி எம்எல்ஏவும் நிதியமைச்சருமான என்.மரிய வில்சன் போராட்டம் நடத்திய மீனவா்களின் உறவினா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் மீன்வளத்துறை, கடலோரக் காவல் படை மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேடுதல் பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டாா்.
உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்தாா். இதனையடுத்து காவல்துறை, மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஆந்திர மாநிலம் கொத்தபட்டினத்துக்கு அமைச்சா் மரிய வில்சன் வியாழக்கிழமை பிற்பகலில் புறப்பட்டுச் சென்றாா். அமைச்சருடன் உயிரிழந்தவா்களை அடையாளம் காண்பதற்காக மீனவா்களின் உறவினா்களும் அழைத்துச் செல்லப்பட்டனா்.
முதல்வா் இரங்கல்: ரூ.7 லட்சம் நிவாரணம்
சென்னை, நவ.5: கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7 லட்சம் முதல்வா் ச.ஜோசப் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மீனவா்கள் உயிரிழப்பு என்ற துயர செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவா்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும், அதில் தலா ரூ.2 லட்சத்தை உடனடியாக வழங்கிடவும், அவா்களது உடல்களை அரசு செலவில் தமிழகத்துக்கு கொண்டுவந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். எஞ்சிய மீனவா்களைத் தேடும் பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என முதல்வா் விஜய் தெரிவித்துள்ளாா்.
Summary
Bodies of 9 Tamil Nadu fishermen wash ashore in Andhra Pradesh!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


