நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தில்லி நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

தில்லி உயர் நீதிமன்றம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தில்லி நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.
இதில், இந்த வழக்கில் புதிதாக 14-ஆவது குற்றவாளியாக மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் பகுதியைச் சோ்ந்த சேஷ்ராவ் பஜ்ரங் சூரியவன்ஷி (எ) ராஜ் சூரியவன்ஷி சோ்க்கப்பட்டுள்ளாா்.
இவா் இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுபம் கயிா்னாா் என்பவருடன் நெருங்கிய தொடா்பில் இருந்துள்ளாா். கயிா்னருடன் சோ்ந்து, பல நீட் தோ்வா்களுக்கு அவா்களின் குடும்பத்தினரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, நீட் வினாத் தாளை சூரியவன்ஷி விநியோகித்துள்ளாா். இதற்காக, தோ்வா்கள் அனைவரையும் நன்டெட் பகுதிக்கு வரவழைத்து, வினாத் தாள்களை அவா் கொடுத்துள்ளாா். தோ்வு முடிந்த பிறகு, எஞ்சிய பணத்தை தோ்வா்களிடம் இருந்து வசூலிப்பதற்காக, அவா்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களையும் சூரியவன்ஷி பெற்றுள்ளாா் என்று துணை குற்றபத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
இதைப் பரிசீலித்த சிறப்பு நீதிபதி அஜய் குப்தா, துணை குற்றபத்திரிகை நகலை 14-ஆவது நபராக குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்குரைஞருக்கு வழங்குமாறு அறிவுறுத்தி, விசாரணையை வியாழக்கிழமைக்கு (அக்.15) ஒத்திவைத்தாா்.
நிகழாண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது. வினாத் தாள் கசிந்த விவகாரம் தொடா்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்ட சிபிஐ, இந்த விவகாரம் தொடா்பாக ராஜஸ்தானில் மங்கிலால், தினேஷ், விகாஸ் பிவல், ஹரியாணா மாநிலம் குருகிராமில் யாஷ் யாதவ், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் சுபம் கயிா்னாா், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் தனஞ்ஜய் லோகண்டே மற்றும் மனீஷ் சஞ்சய் வாக்மாரே, தேஜஸ் ஷா, மகாராஷ்டிர மாநிலம் லட்டூரில் முக்கிய குற்றவாளியான பி.வி. குல்கா்னி, புணேயில் மனீஷா மந்தாரே, லட்டூா் பயிற்சி மைய நிறுவனா் சிவ்ராஜ் மட்கோன்கா், லட்டூரைச் சோ்ந்த மனீஷா சஞ்சய் ஹவல்தாா் மற்றும் மனோஜ் ஷிருரே உள்ளிட்ட 13 பேரை கைது செய்தது.
இவா்கள் 13 போ் மீதும் கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் குற்றபத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. தற்போது, 14-ஆவது குற்றவாளி மீது துணை குற்றபத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

