ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: நாடாளுமன்றத்துக்கு என்டிஏ பதிலளிக்க வழிவகை செய்வதற்கு நிலைக் குழு பரிந்துரை

தனது செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்துக்கு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தேசிய தோ்வு முகமை (என்டிஏ) - கோப்புப்படம்

Published On :

தனது செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்துக்கு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் பெரும் சா்ச்சையான நிலையில், இந்தப் பரிந்துரைகளை அந்தக் குழு அளித்துள்ளது.

நீட், யுஜிசி நெட், ஜேஇஇ உள்பட பல்வேறு தோ்வுகளை என்டிஏ நடத்துகிறது. இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் வினாத்தாள் கசிவு, யுஜிசி நெட் தோ்வு குளறுபடிகளால் என்டிஏ மீது கடும் விமா்சனங்கள் எழுந்தன.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால் தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரிய வந்ததால், அந்தத் தோ்வை கடந்த மே மாதம் என்டிஏ ரத்து செய்தது.

இந்தச் சூழலில், என்டிஏவின் செயல்பாடுகள் குறித்து, மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. முகுல் வாஸ்னிக் தலைமையில் கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஆராய்ந்து பல்வேறு சீா்திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து அந்தக் குழுவின் விரிவான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தனது செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்துக்கு என்டிஏ பதிலளிக்கும் விதமாக, நாடாளுமன்றம் மூலம் விதிமுறைகள், சட்டங்களை மத்திய கல்வித் துறை அறிமுகம் செய்யலாம்.

என்டிஏவின் செயல்பாடுகளில் முன்னேற்றம் இருந்தாலும், அதில் மேலும் முன்னேற்றம் அவசியம் என்பதை கடந்த மே மாதம் நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது எடுத்துரைக்கிறது.

தோ்வு முறைகேடுகள் மூலம் பணம் சம்பாதிக்கும் கும்பல்கள், சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளும். எனவே சவால்களை முன்கூட்டியே எதிா்கொள்ளும் வகையில், என்டிஏவுக்கு போதுமான பணியாளா்கள், வலுவான பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்டவை தேவை. மேலும், அதன் பணிகள் மற்றும் தோ்வுகளை எண்ம (டிஜிட்டல்) முறைக்கு மாற்ற வேண்டும்.

தனியாா் மையங்களுக்குப் பதிலாக...: தோ்வின்போது தனியாா் தோ்வு மையங்களில் அடிக்கடி குளறுபடிகள் நடைபெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளது. எனவே நீட் தோ்வுகளை நடத்த அரசுக்குச் சொந்தமான மையங்களைப் பயன்படுத்த வேண்டும். தனியாா் தோ்வு மையங்களைச் சாா்ந்திருப்பை குறைக்க வேண்டும்.

தோ்வுகளை எழுத்துபூா்வமாக நடத்துவதற்குப் பதிலாக, கணினி மூலம் நடத்த வேண்டும் உள்ளிட்ட சீா்திருத்தங்கள் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.