2 ஆவது பெண் ஆளுநர்! கர்நாடகத்தின் புதிய ஆளுநராக சுதா யாதவ் பதவியேற்பு!
கர்நாடகத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சுதா யாதவ் பதவியேற்றுக்கொண்டார்...

கர்நாடக ஆளுநர் சுதா யாதவ் உடன் முதல்வர் டி.கே. சிவகுமார்
கர்நாடகத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் முனைவர். சுதா யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.
நாட்டின் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகப் பதவி வகித்த ராஜேந்திர அர்லேகர் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கர்நாடகத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சுதா யாதவ் இன்று (அக். 16) பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம், கர்நாடகத்தின் 2 ஆவது பெண் ஆளுநர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இன்று காலை நடைபெற்ற ஆளுநர் சுதா யாதவின் பதவியேற்பு விழாவில், கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விபு பக்ரு அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா மற்றும் பதவி விலகும் ஆளுநர் தாவர்சந்த் கெஹ்லோட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆளுநர் சுதா யாதவுக்கான வரவேற்பு நிகழ்ச்சியிலும், பதவி விலகும் ஆளுநர் தாவர்சந்தின் பிரிவு உபச்சார விழாவிலும் பேசிய முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
“கர்நாடகத்தின் முதல் பெண் ஆளுநர் ரமாதேவியுடன் பணியாற்றும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருந்தது. இப்போது, முனைவர். சுதா யாதவ் உடன் பணியாற்றும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்துள்ளது. நாம் புதிய உற்சாகத்துடன் இணைந்து பணியாற்றுவோம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கர்நாடகத்தின் முதல் பெண் ஆளுநராகக் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை வி.எஸ். ரமாதேவி பதவி வகித்தார். இவர், இந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Senior BJP leader Dr. Sudha Yadav has taken office as the new Governor of Karnataka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


