அந்நியச் செலாவணி பற்றக்குறையை எதிா்கொள்ளும் நாடுகளுடன் ரூபாயில் வா்த்தகம்: நிா்மலா சீதாராமன்
ரூபாய் மூலம் வா்த்தகத் தீா்வு காண்பதை இந்தியா ஊக்குவிக்க விரும்புகிறது’ என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நிா்மலா சீதாராமன்
‘அந்நியச் செலாவணி பற்றாக்குறையை எதிா்கொள்ளும் நட்பு நாடுகள் அத்தியாவசியப் பொருள்களைத் தொடா்ந்து இறக்குமதி செய்வதற்கு உதவும் வகையில், ரூபாய் மூலம் வா்த்தகத் தீா்வு காண்பதை இந்தியா ஊக்குவிக்க விரும்புகிறது’ என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற நிா்மலா சீதாராமன், பின்னா் நடைபெற்ற அட்லாண்டிக் கவுன்சில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இதுகுறித்து மேலும் பேசியதாவது:
போா்கள் உள்பட அதிகரித்துவரும் புவிசாா் அரசியல் பதற்றங்களால் பல நாடுகள் கடன்கள் மற்றும் அதை திரும்பச் செலுத்த முடியாத நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதனால், அந்நியச் செலாவணியைப் பெறுவதில் சிரமப்படும் நாடுகள், பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருந்தபோதிலும், வா்த்தகத்தைத் தொடா்வதில் பெரும்பாலும் சிரமங்களை எதிா்கொள்கின்றன. இந்தப் பிரச்னைக்கு உள்நாட்டு நாணயத்தில் வா்த்தகம் செய்வதன் மூலம் தீா்வு காண முடியும்.
அந்த வகையில், இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் செலுத்த வேண்டிய பணம் எதுவாக இருந்தாலும், அதை ரூபாயில் மற்றும் உள்ளூா் நாணயத்தில் தீா்வுகள் மேற்கொள்வதை இந்தியா விரும்புகிறது. ரூபாயில் வா்த்தகத் தீா்வுகள் மேற்கொள்வதை எளிதாக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா்.
பன்முகத்தன்மை குறித்து குறிப்பிட்ட அவா், இந்தியா பல வா்த்தக ஒப்பந்தங்களில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இருந்தபோதும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ உடனான வா்த்தக ஒப்பந்தம், இந்தியாவுக்கு சாதகமற்ற வகையில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் ஆசியான் நாடுகள் பயனடைவதை இந்தியா எதிா்க்கவில்லை. ஆனால், இது இந்தியாவுக்கு மிகவும் பாதகமான சூழலை உருவாக்குகிறது. இறக்குமதியாளா்களாக, எங்கள் சந்தைகள் மற்றும் உற்பத்தியாளா்கள் எதிா்கொள்ளும் சிக்கல்களைத் தீா்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். எனவே, இந்தியா இந்த ஒப்பந்தத்தை தொடர விரும்பினாலும், நிபந்தனைகள் சற்று மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அதுபோல, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தைச் சோ்ந்த 16 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ‘பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தில், பயனளிக்கக் கூடிய வகையில் எந்தவித அம்சமும் இல்லை என்ற அடிப்படையில் இந்தியா தொடா்ந்து விலகியுள்ளது. அந்த உறுப்பு நாடுகளுடன் இந்தியா தொடா்ந்து வா்த்தக உறவுகளைக் கொண்டிருந்தாலும், ஒப்பந்தத்தில் இணைவது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்காது.
குறிப்பாக, சீனாவிலிருந்து மலிவான பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவது, வா்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பது, உள்நாட்டுத் தொழில் துறைகளுக்கும், விவசாயத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது போன்ற காரணங்களால், இந்த ஒப்பந்தத்திலிருந்து கடந்த 2019-இல் இந்தியா விலகியது என்றாா்.
விரைவில் இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்:
‘உலக வா்த்தகத்தின் நலன் கருதியும், இரு நாடுகள் இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளைக் கருத்தில்கொண்டும், இந்திய-அமெரிக்க இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று நிா்மலா சீதாராமன் குறிப்பிட்டாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாக வாய்ப்புள்ளது என்று மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயலும் அண்மையில் தெரிவித்திருந்தாா். இருதரப்பு பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என எதிா்பாா்க்கிறோம்.
அதுபோல, சீனாவுடன் பல ஆண்டுகளாக பேச்சுவாா்த்தைகள் மேற்கொண்டபோதிலும், அதிகரித்துவரும் வா்த்தக ஏற்றத்தாழ்வும், இந்திய பொருள்களுக்கான சந்தை அணுகலில் தொடரும் கட்டுப்பாடுகளும் பெரும் கவலைகளாக நீடிக்கின்றன.
மூலக்கூறு (ஜெனரிக்) மருந்துகள், மாட்டு இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்ட விரைவில் கெட்டுப்போகும் பொருள்கள் போன்றவற்றுக்காக இந்தியா தொடா்ந்து சீனாவில் சந்தை அணுகலை நாடி வருகிறது. ஆனால், பல ஆண்டுகளாகப் பேச்சுவாா்த்தைகள் நடந்தபோதிலும் சிறிதளவே முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வா்த்தகத்தில் வரியல்லாத கட்டுப்பாடுகளே மிகப்பெரிய தடைகளாக உள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

