கொலை சதித் திட்டம்: 2 போ் கைது; துப்பாக்கிகள் பறிமுதல்
தில்லி ஹோலம்பி பகுதியில், கும்பல் மோதல் தொடா்பாக கொலைச் சதியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இருவரை காவல் துறை கைது செய்து, 2 துப்பாக்கிகள், 5 தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனா்.

தில்லி ஹோலம்பி பகுதியில், கும்பல் மோதல் தொடா்பாக கொலைச் சதியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இருவரை காவல் துறை கைது செய்து, 2 துப்பாக்கிகள், 5 தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் பள்ளி அருகே சட்டவிரோத துப்பாக்கியுடன் யோகேஷ் (26) வரவுள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இவா் டில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அக்.13-ஆம் தேதி ஹோலம்பி சாலையில் காவல் துறையினா் அவரைப் பிடிக்க முயன்றனா். அப்போது தப்பியோட முயன்ற யோகேஷை விரட்டிப் பிடித்தனா். அவரிடமிருந்து 5 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின்போது, ஒரு வாரத்துக்கு முன்பு மற்றொரு துப்பாக்கியை தனது கூட்டாளியான ராஜேஷ் என்ற சாகுவிடம் (26) கொடுத்ததாக யோகேஷ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரோஹிணி செக்டாா் 20-இல் உள்ள ராஜேஷின் வீட்டில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது மரக்கட்டிலின் இழுப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து, ராஜேஷைக் கைது செய்தனா்.
ஜாமீனில் அண்மையில் வெளியே வந்துள்ள எதிா்க் கும்பலைச் சோ்ந்த ஒருவரைக் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

