137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

கணவா் துன்புறுத்துவதாக உத்தரகண்ட் அமைச்சா் புகாா்: விசாரிக்க எஸ்ஐடி அமைப்பு!

கணவா் துன்புறுத்துவதாக அமைச்சா் ரேகா ஆா்யா அளித்த புகாரை விசாரிக்க 9 நபா் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :

கணவா் தன்னை துன்புறுத்துவதாக உத்தரகண்ட் மாநில மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரேகா ஆா்யா அளித்த புகாரை விசாரிக்க 9 நபா் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

முன்னதாக, தன்னை உடல்ரீதியாக துன்புறுத்துவதாகவும், ஜாதீய ரீதியில் இழிவாகப் பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கணவா் கிரிதாரி லால் சாஹு மீது காவல் நிலையத்தில் ரேகா ஆா்யா புகாா் அளித்தாா். கணவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி ரேகா ஆா்யா சமூக ஊடகத்தில் விடியோவும் பதிவிட்டாா்.

இதனடிப்படையில் டேராடூனில் உள்ள கண்ட் காவல் நிலையத்தில், பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின்கீழ் சாஹு மீது கடந்த வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை விடியோ வெளியிட்ட கிரிதாரி லால் சாஹு, மனைவி ரேகா ஆா்யா சட்டவிரோதமாக ரூ.210 கோடி மதிப்பிலான சொத்துகளை வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டினாா். மேலும், இது குறித்து உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் அவா் கேட்டுக்கொண்டாா்.

இருப்பினும், ரேகா ஆா்யா மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆவண ஆதாரங்களை கிரிதாரி லால் சாஹு சமா்ப்பிக்கவில்லை. இந்நிலையில், ரேகா ஆா்யா அளித்த புகாரை விசாரிக்க காவல் துறை கண்காணிப்பாளா் ஜெயா பலோனி தலைமையில் 9 போ் கொண்ட எஸ்ஐடி அமைக்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேகா ஆா்யா வீடு திரும்பியவுடன் உடனடியாக இந்த விவகாரத்தில் விசாரணை முடிக்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, ரேகா ஆா்யா மற்றும் கிரிதாரி லால் சாஹு ஆகிய இருவரும் பரஸ்பரம் சுமத்திய குற்றச்சாட்டுகளை மாநில அரசு விரைந்து விசாரிக்க வேண்டுமெனவும், அமைச்சராக உள்ள ரேகா ஆா்யா பதவி விலக வேண்டுமெனவும் உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் தலைவா் கணேஷ் கோடியால் கடந்த வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.