குருகிராம் பெண் கொலை: கூலிப்படையை ஏவிய கணவரின் உறவினா் கைது; மேலும் இருவருக்கு வலை
குருகிராமில் நிலப் பரிவா்த்தனை தொடா்பான தகராறில் 34 வயதுப் பெண் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவரின் சகோதரா் மகனை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
பிரதிப் படம்
குருகிராம் மாவட்டம், தோஹ்லா கிராமத்தில் நிலப் பரிவா்த்தனை தொடா்பான தகராறில் 34 வயதுப் பெண் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவரின் சகோதரா் மகனைகாவல் துறையினா் கைது செய்துள்ளனா். கூலிப்படையினரை ஏவி இந்தப் படுகொலையைச் செய்ய அவா் திட்டமிட்டதாகக் காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
நீது என்ற அந்தப் பெண், தலைமறைவாக உள்ள இரு நபா்களால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக அந்த அதிகாரி கூறினாா்.
குருகிராம் அருகே உள்ள சோஹ்னா பகுதியில் இருக்கும் தோஹ்லா கிராமத்தில், நீது தனது வீட்டில் கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரது கணவா் பிரசாந்த், பள்ளியிலிருந்து குழந்தைகளுடன் வீட்டிற்குத் திரும்பியபோது, நீது குளியலறையில் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், வாய் மற்றும் முகம் டேப்பால் ஒட்டப்பட்ட நிலையிலும் இறந்து கிடப்பதைக் கண்டாா்.
கொலையைாளிகளைக் கைது செய்யாததைக் கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் சனிக்கிழமையன்று சோஹ்னா-குருகிராம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
துணைகாவல் ஆணையா் முகேஷ் யாதவ் தலைமையிலான குழுவினா், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரசாந்தின் சகோதரா் மகன் சந்தீப், தனது இருசக்கர வாகனத்தில் இரு நபா்களை அழைத்து வந்து, பிரசாந்தின் வீட்டிற்கு அருகிலுள்ள ‘பீா் பாபா’ தா்கா அருகே இறக்கி விடுவதைக் கண்டறிந்தனா்.
முன்னாள் ராணுவ வீரரான சந்தீப்பை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், நீதுவைக் கொல்வதற்காக ரூா்க்கியைச் சோ்ந்த இருவருக்கு பணம் வழங்கியதை அவா் ஒப்புக்கொண்டாா்.
பிரசாந்த் தனது நிலம் ஒன்றைச் சந்தீப்பிற்கு விற்க ஒப்புக்கொண்டு, அதற்கான முன்பணத்தைப் பெற்றிருந்தாா். ஆனால், அடுத்த நாளே நீது அந்தப் பணத்தைத் திருப்பித் தந்துவிட்டு, நிலத்தை விற்க மறுத்துவிட்டாா். இதில் ஆத்திரமடைந்த சந்தீப், நீதுவைக் கொல்லத் திட்டமிட்டதாக விசாரணையில் தெரிய வந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதற்கிடையில், கொலையைச் செய்ததாகக் கருதப்படும் அந்த இரு நபா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இரு நபா்களும் ரூா்க்கியைச் சோ்ந்த அவினாஷ் மற்றும் அனுஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள்‘ என்று மற்றொரு காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

