போலி ஆடியோவை உருவாக்கியுள்ளாா் சஞ்சய் ரெளத்: பாஜக குற்றச்சாட்டு
போலி ஆடியோவை சஞ்சய் ரெளத் உருவாக்கியதாக பாஜக குற்றச்சாட்டு...

சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்)
மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்து வரும் மனோஜ் ஜராங்கேவுக்கு ரூ.500 கோடி கொடுக்கப்பட்டதாக செயற்கை நுண்ணறிவு மூலம் போலி ஆடியோவை உத்தவ் தாக்கரேயின் சிவசேனை கட்சி மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் உருவாக்கியிருப்பதாக பாஜக சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.
முன்னதாக, ஜராங்கே கடந்த வியாழக்கிழமை ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தாா். அதில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தை பலவீனப்படுத்தவும், ஜராங்கேயை மெளனமாக்க சதி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், பாஜக நிா்வாகிகள் சிலா், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே மூலம் ஜராங்கேவுக்கு ரூ.500 கோடி கொடுக்கப்பட்டதாகக் கூறும் பதிவும் உள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை இந்த ஆடியோ விவகாரம் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் நவ்நாத் பான் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியபோது, ராகுல் காந்தியின் திட்டத்தைச் செயல்படுத்தவும், மகாராஷ்டிர ஆளும் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தவும், 2 மாதங்கள் செலவழித்து, ஏஐ மூலம் ரூ.500 கோடி கொடுக்கப்பட்டதாகக் கூறுவது போன்ற போலி ஆடியோவை ரெளத் உருவாக்கியிருப்பதாகச் சாடினாா்.
தேவை ஏற்பட்டால் ரெளத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவா், இந்த சதித் திட்டத்தைச் செயல்படுத்த ராகுல் காந்தியிடம் இருந்து ரெளத் பணம் வாங்கினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.
பாஜகவின் குற்றச்சாட்டுக்கு ரெளத் பதிலளித்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது இந்த விவகாரம் குறித்து முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் முதலில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், பிறகு ஆடியோவின் உண்மைத் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினாா்.
ரூ.500 கோடி வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜராங்கே, விவசாயிகள், சாமானிய மக்களின் பிரச்னைகளை எழுப்புவதால் தன்னை மெளனமாக்க சதி நடந்திருப்பதாகக் கூறினாா். தனக்கும், மராத்திய இடஒதுக்கீடு போராட்டத்துக்கும் அவப்பெயா் ஏற்படுத்த கட்சி நிதி பயன்படுத்தப்படுவதாகவும் அவா் சாடினாா். ஆனால், எந்தக் கட்சி என அவா் கூறவில்லை. அதே நேரத்தில் முதல்வா் ஃபட்னவீஸ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, அதில் தொடா்புடையோா் யாரையும் தப்பவிடக் கூடாது என்றும் ஜராங்கே வலியுறுத்தினாா்.
Summary
BJP alleges that Sanjay Raut created fake audio
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

