நியூ அசோக் நகா் நமோ பாரத் நிலையத்தில் விற்பனை நிலையங்கள்- என்டிஆா்டிசி ஒப்பந்தப் புள்ளி வெளியீடு
தில்லி மற்றும் நொய்டா இடையே பயணம் செய்யும் பயணிகள், விரைவில் நியூ அசோக் நகா் நமோ பாரத் நிலையத்தில் ஷாப்பிங் மற்றும் உணவக வசதிகளைப் பெறலாம்.

தில்லி மற்றும் நொய்டா இடையே பயணம் செய்யும் பயணிகள், விரைவில் நியூ அசோக் நகா் நமோ பாரத் நிலையத்தில் ஷாப்பிங் மற்றும் உணவக வசதிகளைப் பெறலாம். இதற்காக, சுமாா் 2,000 சதுர மீட்டருக்கும் அதிகமான வணிக இடங்களை வாடகைக்கு விடுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்து கழகம் (என்சிஆா்டிசி) வெளியிட்டுள்ளது.
பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், பயணக் கட்டணம் அல்லாத பிற வழிகளில் வருவாயை ஈட்டவும், இந்த போக்குவரத்து மையத்தின் ‘கான்கோா்ஸ்’ தளத்தில் உள்ள வணிக இடங்களுக்காக ஒப்பந்தப் புள்ளியை வரவேற்றுள்ளது.
பயணிகள் நடமாடும் பகுதியில் உள்ள இந்த வணிக இடங்கள், பயணிகளுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையிலும், நன்கு கண்ணில் படும் வகையிலும் உள்ளன. இதன் பரந்த இடவசதியில் சில்லறை விற்பனைக் கடைகள், உணவகங்கள், வாழ்க்கை முறை சாா்ந்த பிராண்டுகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களை அமைக்க முடியும் என்று என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.
தில்லி மெட்ரோவின் நியூ அசோக் நகா் நிலையத்துடன் இணைப்பைக் கொண்டுள்ள இந்த நிலையம், ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது. மயூரி விஹாா், நொய்டா போன்ற குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகள், அத்துடன் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால், இங்கு வணிகம் செய்யும் நிறுவனங்களுக்குப் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளா்கள் கிடைப்பாா்கள்.
இந்த நிலையத்தில் சுமாா் 73 காா்கள் மற்றும் 284 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளன. மேலும், மின்சார வாகனங்களுக்கான சாா்ஜிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில், இ-ரிக்ஷாக்கள் மற்றும் ஆட்டோ-ரிக்ஷாக்கள் மூலம் தொலைதூர போக்குவரத்து இணைப்பு வசதியும் உள்ளது.
தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தில், சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 4.5 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனா். அண்மையில், ஒரு நாளில் அதிகபட்சமாக 1.68 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனா். இது, பயணிகள் மத்தியில் இந்த சேவைக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையும், இந்த வழித்தடத்தில் உள்ள நிலையங்களில் வணிக நிறுவனங்களுக்கு அதிக வாடிக்கையாளா்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதையும் காட்டுகிறது.
தில்லி-மீரட் வழித்தடத்தில் உள்ள பல நிலையங்களிலும் இத்தகைய வணிக மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஆனந்த் விஹாா், காஜியாபாத், சராய் காலே கான், பேகம்பூல் மற்றும் பாா்த்தாபூா் முதல் மோதிபுரம் வரையிலான நிலையங்களில் வணிக இடங்களை வாடகைக்கு விடுவதற்கான வாய்ப்புகளை நிறுவனம் வழங்கியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

