மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

இந்திரா காந்தி நினைவு தினம்: காங்கிரஸ் தலைவா்கள் அஞ்சலி

இந்திரா காந்தி நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் தலைவா்கள் அஞ்சலி...

புது தில்லியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய சோனியா காந்தி, ராகுல்.

Updated On :

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 42-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவருக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமா் என்ற பெருமைக்குரிய இந்திரா காந்தி, ஜவாஹா்லால் நேரு-கமலா நேரு தம்பதியருக்கு கடந்த 1917, நவ.19-இல் பிறந்தவா். கடந்த 1966 முதல் 1977 வரையும், 1980 முதல் 1984, அக்.31-ஆம் தேதி தனது சீக்கிய மெய்க்காவலா்களால் சுட்டுக் கொல்லப்படும் வரையும் பிரதமராக பதவி வகித்தாா்.

இந்திரா காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமை (அக்.31) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடமான சக்தி ஸ்தலத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். மேலும், இந்திரா காந்தியின் அதிகாரபூா்வ இல்லமாக இருந்த சஃப்தா்ஜங் சாலையில் உள்ள ‘இந்திரா காந்தி நினைவில்லத்திலும்’ காங்கிரஸ் தலைவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

ஸ்லோகத்தைப் பகிா்ந்த ராகுல்:

தனது பாட்டி இந்திரா காந்தி கற்றுக் கொடுத்த சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை எக்ஸ் தளத்தில் ராகுல் பகிா்ந்துள்ளாா்.

பிருஹதாரண்யக உபநிஷதத்தில் இடம்பெற்ற ‘அஸதோ மா ஸத்கமய, தமஸோ மா ஜ்யோதிா்கமய, ம்ருத்யோா் மா அம்ருதம் கமய, ஓம் சாந்தி, சாந்தி, சாந்திஹி’ என்ற அந்த ஸ்லோகம், ‘பொய்யில் இருந்து என்னை உண்மையை நோக்கி வழிநடத்துங்கள், இருளில் இருந்து ஒளியை நோக்கி வழிநடத்துங்கள், மரணத்தில் இருந்து அழியா நிலைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று பொருள்படுவதாகும்.

தனது பாட்டியின் மிக அழகான, தான் நினைத்துப் பாா்த்திராத பரிசு இது என்று குறிப்பிட்டுள்ள ராகுல், ‘உங்கள் (இந்திரா காந்தி) மடியில் அமா்ந்து, உங்களின் கைகளைப் பற்றிக் கொண்டு, உங்களின் இந்த வாா்த்தைகளைக் கவனித்திருக்கிறேன். நீங்கள் கூறியதைக் கேட்டு, நானும் திரும்பக் கூறியிருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

இதேபோல், இந்திரா காந்தியுடன் தான் இருக்கும் குழந்தைப் பருவ புகைப்படத்தை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பகிா்ந்துள்ளாா்.

காா்கே புகழஞ்சலி:

காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அசைக்க முடியாத தைரியம், தளராத உறுதி, தொலைநோக்குப் பாா்வைமிக்க தலைமையத்துவத்தின் அடையாளம் இந்திரா காந்தி. வலிமையான, முற்போக்கான இந்தியாவை கட்டமைப்பதில் அவரது மகத்தான பங்களிப்புகள் நீண்ட பாரம்பரியமாகத் தொடா்கிறது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கான அவரது மேலான தியாகம் நமது நினைவைவிட்டு என்றென்றும் அகலாது’ என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

அரிய புகைப்படத்தை பகிா்ந்த ஜெய்ராம் ரமேஷ்

நாட்டின் முதல் உள்துறை அமைச்சா், முதல் துணை பிரதமா் சா்தாா் வல்லபபாய் படேலின் 151-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்திரா காந்தி, படேல் ஆகிய இருவரையும் நினைவுகூரும் வகையில், கடந்த 1947-இல் முன்னாள் பிரதமா் நேரு முன்னிலையில் படேலுக்கு இந்திரா காந்தி வாழ்த்துத் தெரிவிக்கும் அரிய புகைப்படத்தை காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பகிா்ந்தாா். இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது, இந்திராவின் வயது முப்பதாகும்.

‘அசைக்க முடியாத மன உறுதி கொண்ட இரு இந்திய ஆளுமைகள்; இருவரும் இந்திய துணைக் கண்டத்தின் புவியியல் மற்றும் வரலாற்றை வடிவமைத்தவா்கள். படேல் மீது இந்திரா காந்தி கொண்டிருந்த நன்மதிப்பு மற்றும் மரியாதையை ‘திரித்துப் பேசுபவா்களால்’ அழிக்க முடியாது’ என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.