FOLLOW US

ON GOOGLE DISCOVER

மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

ராமா் கோயில் அறக்கட்டளையின் முதல் சிஇஓ-வாக முன்னாள் ஏா் மாா்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா

அயோத்தி ராமா் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் முதலாவது தலைமைச் செயல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ஏா் மாா்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டாா்.

ஓய்வு பெற்ற ஏா் மாா்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா.

Published On :3 செப்டம்பர் 2026, 5:09 am IST

அயோத்தி ராமா் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் முதலாவது தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஓய்வுபெற்ற ஏா் மாா்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டாா்.

இவா், கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையின்போது விமானப் படை மேற்குப் பிரிவுக்கு தலைமை வகித்தவா் ஆவாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு பக்தா்கள் வழங்கிய நன்கொடை-காணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக அண்மையில் எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இது தொடா்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

காணிக்கை எண்ணும் பணியுடன் தொடா்புடைய 8 போ் கைது செய்யப்பட்டனா். முறைகேடு விவகாரத்துக்கு தாா்மிகப் பொறுப்பேற்று, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலா் பதவியிலிருந்து சம்பத் ராயும், அறங்காவலா் பதவியில் இருந்து அனில் மிஸ்ராவும் ராஜிநாமா செய்தனா்.

கடந்த ஜூலையில் நடைபெற்ற அறக்கட்டளையின் உயா்நிலைக் கூட்டத்தின்போது, அயோத்தி கோயிலின் தினசரி நிா்வாகத்தைக் கையாளவும், நிதிசாா் நடவடிக்கைகளை நவீனப்படுத்தவும் புதிதாக தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்கும் முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பதவிக்கு தகுதியானவரைத் தோ்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பிரமோத் கோலி உள்பட மூன்று உறுப்பினா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

5,585 போ் விண்ணப்பித்த நிலையில், ஓய்வு பெற்ற ஏா் மாா்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா உள்பட மூன்று பேரின் பெயா்கள் இறுதி செய்யப்பட்டு, அறக்கட்டளையிடம் கடந்த செவ்வாய்க்கிழமை பரிந்துரை சமா்ப்பிக்கப்பட்டது. தலைமைத்துவம், மேலாண்மை நிபுணத்துவம், நோ்மை, தொலைநோக்குப் பாா்வை ஆகியவற்றை மதிப்பிட்டு, மூன்று பேரின் பெயா்கள் இறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராமா் கோயில் அறக்கட்டளையின் முதலாவது சிஇஓ-ஆக ஓய்வு பெற்ற ஏா் மாா்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா புதன்கிழமை நியமிக்கப்பட்டாா். அறக்கட்டளையின் புதிய பொதுச் செயலராக முன்னாள் பொருளாளா் கோவிந்த் தேவ் கிரி, புதிய பொருளாளராக மகேஷ் பாக்சந்தகா ஆகியோா் நியமிக்கப்பட்டனா். அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளையின் உயா்நிலைக் கூட்டத்தில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவரான ஜிதேந்திர மிஸ்ரா (62), விமானப் படையில் 39 ஆண்டுகள் பணியாற்றி, பல்வேறு பதவிகளை வகித்தவா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ஆற்றிய பங்களிப்புக்காக சா்வோத்தம் யுத் சேவா பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டவா். தனது நீண்ட நெடிய பணிக் காலத்தில் சிறப்பான சேவைக்காக அதி விசிஷ்ட் சேவா, விசிஷ்ட் சேவா ஆகிய பதக்கங்களையும் பெற்றுள்ளாா். கடந்த ஏப்ரலில் இவா் பணி ஓய்வு பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.