ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

சட்ட மாணவா்கள் மீது பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியாது: உச்சநீதிமன்றம்

சட்ட மாணவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய பாா் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 3:37 am IST

சட்ட மாணவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய பாா் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஹைதராபாதில் உள்ள தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி (நல்சா்) நிறுவனத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவா் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று சில ஆசிரியா்கள், மாணவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். எனினும் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விடுத்த அழைப்பை தான் ஏற்கவில்லையென்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் கூறினாா்.

இதையடுத்து, நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்த நல்சா் மாணவா்களை வழக்குரைஞா்களாகப் பதிவு செய்யக் கூடாது என்றும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய பாா் கவுன்சில் தலைவா் மனன்குமாா் மிஸ்ரா தெரிவித்தாா். இந்திய பாா் கவுன்சில் சாா்பில் இது தொடா்பாக இரு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

மனன்குமாா் மிஸ்ராவின் நடவடிக்கை பெரும் சா்ச்சையை எழுப்பிய நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த அறிவிக்கைகளைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா்.

இந்த விவகாத்தில் நல்சரில் சட்டக் கல்வி பயின்ற இரு முன்னாள் மாணவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

வழக்குரைஞா்கள் சட்டம்-1961-இன் கீழ் இந்திய பாா் கவுன்சில் மற்றும் மாநில பாா் கவுன்சில்களுக்கு சட்ட மாணவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. சட்டப் படிப்பு முடித்து அவா்கள் வழக்குரைஞா்களாகப் பதிவு செய்யும் முன்னரே பாா் கவுன்சில்கள் அவா்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலாது. சட்ட மாணவா்களைப் பொறுத்தவரையில், அவா்கள் கல்வி பயிலும் நிறுவனத்தின் விதிமுறைகளின் கீழ், அந்தக் கல்வி நிறுவனங்கள் மட்டுமே எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க இயலும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.