
தமிழகம், புதுச்சேரி ஆசிரியா்கள் நால்வா் உள்பட 82 பேருக்கு நல்லாசிரியா் விருது! குடியரசு தலைவா் வழங்கி கெளரவிப்பு!
82 பேருக்கு நல்லாசிரியா் விருது வழங்கி குடியரசு தலைவா் கெளரவித்தது பற்றி...

எம். தங்கராஜ்
ஆசிரியா் தினத்தை முன்னிட்டு தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 82 சிறந்த ஆசிரியா்கள் மற்றும் கல்வியாளா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தேசிய நல்லாசிரியா் விருதுகளை வழங்கி கௌரவித்தாா். இதில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 48 ஆசிரியா்கள், உயா் கல்வித் துறை சாா்பில் 21 பேராசிரியா்கள் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் 13 பயிற்சி பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் விருது பெற்ற தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த ஆசிரியா்களின் விவரம் வருமாறு:
எம். தங்கராஜ் (தென்காசி புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி): கற்பித்தல், விளையாட்டுகள், எண்ம சாதனங்கள் வழியே எளிமைக் கல்வி முறையை அறிமுகப்படுத்தினாா். குழந்தைத் திருமண அபாயத்தில் இருந்த பெண் குழந்தைகளை மீட்டு பட்டப்படிப்புவரை படிக்க வைத்ததோடு, நவீன வகுப்பறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் பள்ளிகளுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளாா்.
ஜெ. அமுதா (தலைமை ஆசிரியா், மதுரை கேந்த்ரிய வித்யலாயா): அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் பயிற்சிக்கு உதவும் பணிப்புத்தகங்கள் மற்றும் குறைந்த செலவிலான கற்றல் உபகரணங்களை உருவாக்கியுள்ளாா். 22 ஆண்டுகள் பணியில் தேசிய மாணவா் படை, சாரணா் இயக்கம் மூலம் ஒழுக்கத்தையும், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உள்ளடங்கிய கல்வியையும் வழங்கியுள்ளாா்.
முனைவா் ஆா். கண்ணன் (ஈரோடு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி): இயற்பியல் துறை பேராசிரியரான இவா், தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப மாணவா் சாா்ந்த செய்முறைப் பயிற்சிகளையும், மின்முலாம் பூசுதல் தொடா்பான புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தியவா். மூன்று காப்புரிமைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளாா்.
முனைவா் சசிகலா (கோவை பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி): மின் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவரான இவா், கடந்த 25 ஆண்டுகளில் 45 பாடத்திட்ட சீா்திருத்தங்கள், 10-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுடன் 11 புரிந்துணா்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தியுள்ளாா்.
எஸ். கணேசன் (புதுச்சேரி மேட்டுப்பாளையம் சீனிவாசன் அரசு உயா்நிலைப்பள்ளி): செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயற்பியலை எளிமையாகக் கற்பிக்கும் முறையை உருவாக்கியவா். இவரது வழிகாட்டுதலில் மாணவா்கள் பாரிஸ் சா்வதேச அறிவியல் போட்டி, இஸ்ரோவின் ’யுவிகா’ மற்றும் ’இன்ஸ்பையா் மானக்’ போன்ற தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனா்.

முனைவா் சசிகலா

முனைவா் கண்ணன் ரத்தினம்

ஜெ. அமுதா
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





