FOLLOW US

ON GOOGLE DISCOVER

உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

இந்த வாரம் கலாரசிகன் - 30-08-2026

தேசப்பற்று, சமயப்பற்று, தமிழ்ப்பற்று மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற நிகழ்காலத் தமிழ் ஆளுமைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் முதல் பத்து பேரில் ஒருவராக டி.எஸ். தியாகராசன் இருப்பார்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:26 pm IST

நாவலர்-இரா.செழியன் அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு மேனாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதனுக்கும், திரிபுரா மாநில மேனாள் முதல்வர் மாணிக் சர்காருக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நேற்று சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதில் எனக்கு ஆத்ம திருப்தி.

ஆண்டுதோறும் நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் தமிழக அரசியல் ஆளுமை ஒருவருக்கும், இரா. செழியன் பெயரில் தேசிய அளவில் பங்களிப்பு நல்கிய தலைவர் ஒருவருக்கும் விருது வழங்கி கெளரவிக்கிறது நாவலர்-இரா. செழியன் அறக்கட்டளை. கடந்த ஆண்டு நாவலர் விருது பழ. நெடுமாறன் ஐயாவுக்கும், இரா. செழியன்

விருது மேனாள் மத்திய அமைச்சரும் காஷ்மீர் அரச குடும்பத்தின் வாரிசுமான டாக்டர் கரன் சிங்குக்கும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விருதுகளை வழங்கி கெளரவித்தவர் மேனாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல், அவரையும் திரிபுரா மாநிலத்தின் மேனாள் முதல்வர் மாணிக் சர்காரையும் சந்திக்கும் வாய்ப்புக்காகவும் நான் கேளம்பாக்கம் விஐடி நிகழ்வுக்குச் சென்றேன்.

தனது 31-ஆவது வயதில் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து முதல்முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மாணிக் சர்கார். 1998-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான கையோடு, சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திரிபுராவில் அமைந்த மார்க்சிஸ்ட் கூட்டணியின் முதல்வராகவும் பொறுப்பேற்றார் அவர். அடுத்த 20 ஆண்டுகள், நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களை இடதுசாரி கூட்டணி மாணிக் சர்காரின் தலைமையில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதற்கு, அவரது தலைமையும் நேர்மையான நிர்வாகமும்தான் காரணம்.

தொடர்ந்து 20 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த விரல்விட்டு எண்ணக்கூடிய முதல்வர்களில் மாணிக் சர்காரும் ஒருவர் என்பதுடன் நின்றுவிடவில்லை அவரது தனித்துவம். கடைசிவரை எளிமையாக வாழ்ந்தது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் தேர்தல் அரசியலில் இருந்து தாமே விலகிக்கொண்ட பெருந்தன்மையும் அவருக்கு மட்டுமே உரித்தானது.

அரசியல் வாழ்வில் நேர்மைக்கும் தூய்மைக்கும் அடையாளமாகத் திகழ்ந்த இரா. செழியன் பெயரில் அமைந்த விருதுக்குத் தோழர் மாணிக் சர்காரைவிடத் தகுதியான ஒருவர் இப்போது இந்தியாவில் இல்லை. அவரை நினைவுகூர்ந்து தேர்ந்தெடுத்த நாவலர்-இரா. செழியன் அறக்கட்டளைக்கு நன்றி.

விருதுகள் மரியாதை இழந்துவரும் காலகட்டத்தில், தகுதியானவர்களுக்குத் தகுதியான விருதுகள் வழங்கப்படுகிறது என்பதற்கு நாவலர்-இரா. செழியன் அறக்கட்டளை ஆண்டுதோறும் வழங்கிடும் விருதுகள் எடுத்துக்காட்டு.

**********

தேசப்பற்று, சமயப்பற்று, தமிழ்ப்பற்று மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற நிகழ்காலத் தமிழ் ஆளுமைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் முதல் பத்து பேரில் ஒருவராக டி.எஸ். தியாகராசன் இருப்பார்.

மற்றவர்களுக்கு எல்லாம் எப்படியோ தெரியாது, எனக்குத் திருக்குவளை என்றால் முதலில் நினைவுக்கு வருவது டி.எஸ். தியாகராசன்தான். அவரது குடும்பத்தின் பாரம்பரிய வீடுதான், தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் குடும்பத்துக்குக் கைமாறியது என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கக்கூடும். தேவாரத் திருமுறை நாளும் பொழுதும் ஓதப்பட்டுக் கொண்டிருந்த திருக்கோளிலி என்கிற திருக்குவளையில் பிறந்ததாலோ என்னவோ, அவரை சைவமும், சைவம் வளர்த்த தமிழும் ஆட்கொண்டது.

திருக்கோவிலூரில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றியபோது டி.எஸ். தியாகராசன், அந்தத் திருத்தலத்தில் நிறைவேற்றி இருக்கும் சமுதாயப் பணி ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியைத் தொடங்கியது; தமிழ்ப்பணி திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தை நிறுவி ஆண்டுதோறும் கபிலர் விழா எடுப்பது. அடுத்த ஆண்டில் பொன்விழா கொண்டாட இருக்கும் திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம், நல்ல பல தமிழ் அறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு 'கபிலவாணர்' விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறிய பிறகும் டி.எஸ். தியாகராசனின் சமய, சமூகப் பணிகள் தொய்வடையவில்லை. பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனுக்கு உறுதுணையாக இருந்து சைவம் வளர்க்க சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். வட சென்னையில் உள்ள கொடுங்கையூரில் ஸ்ரீ சாயி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியை உருவாக்கி ஆண்டுதோறும் அங்கே இசை விழா நடத்தி, கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு 'டி.கே. பட்டம்மாள் விருது' வழங்கி கெளரவித்து வருகிறார்.

'தினமணி' வாசகர்களுக்கு டி.எஸ். தியாகராசனை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லைதான். அவரது ஆசிரியர் உரைப் பக்கக் கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்புப் பெற்றவை. தொழில்முறை எழுத்தாளராக இல்லாத காரணத்தால், சாமானிய இந்தியக் குடிமகனின் சமுதாயக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட அவரது கட்டுரைகள் உணர்வுபூர்வமானவை. அதனால்தான் வாசகர்கள் அந்தக் கட்டுரைகளைத் தாங்களே எழுதியதுபோன்ற உணர்வைப் பெறுகின்றனர்.

'தினமணி'யில் டி.எஸ். தியாகராசன் எழுதிய ஆசிரியர் உரைப் பக்கக் கட்டுரைகள் ஏற்கெனவே ஒருமுறை தொகுக்கப்பட்டு புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. இப்போது அதன் நீட்சியாக மேலும் 45 கட்டுரைகள் 'மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியும், இப்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவருமான மாண்பமை வெ. இராமசுப்பிரமணியனின் அணிந்துரையுடன் வெளியாகி இருக்கும் கட்டுரைகள் எல்லாமே அச்சுக்குப் போவதற்கு முன்பும், அச்சேறி வந்த பிறகும் நான் படித்து, ரசித்தவை.

டி.எஸ். தியாகராசனின் தேசியப் பார்வையும், தமிழ்ப் பற்றும் அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் உயர்ந்து நிற்கின்றன. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் அனைத்துமே பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெறத் தகுதியானவை. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி- கல்லூரி நூலகங்களிலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

**********

விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் மெஹராஜ் இஸ்மாயில் வெளிக்கொணர்ந்திருக்கும் 'கவிதை என்பது உன்னை சந்திக்க வரும் வழி'. இது அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு என்று தெரிவிக்கிறது அணிந்துரை. இந்த வாரத்துக்கான தேர்வு அதிலிருந்து...

பிரிந்து செல்ல

சொற்கள் இருக்கின்றன

சந்தித்துக் கொள்ள

நினைவு இருக்கிறது...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.