தமிழர் பண்பாட்டுக்கு இந்தியா என்றும் மதிப்பளிக்கும்: கொழும்பில் இந்திய வம்சாவளியினரிடம் ராஜ்நாத் சிங் உறுதி
தமிழர் பண்பாட்டுக்கும் வளர்சிக்கும் இந்தியா என்றென்றும் மதிப்பளிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

நமது சிறப்பு நிருபர்
தமிழர் பண்பாட்டுக்கும் வளர்சிக்கும் இந்தியா என்றென்றும் மதிப்பளிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
இலங்கைக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை இலங்கை பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கே.பி. அருண ஜெயசேகர, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகியோர் வரவேற்றனர்.
38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.
இதைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியில் மாலையில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஆன்மிகமும் கலாசாரமும் இரண்டறக் கலந்த இலங்கை மண்ணில் உங்களைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு, வளர்ச்சி மீது பிரதமர் நரேந்திர மோடியும் நாங்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். நேர்மையான ஆட்சியின் அடையாளமாக நாடாளுமன்றத்தில் "செங்கோல்' நிறுவப்பட்டதும், திருவள்ளுவர், பாரதியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு மத்திய அரசு அளிக்கும் உயர் மரியாதையாகும்.
இந்தியாவின் எல்லைகள் இன்று முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. நாம் யாரையும் முதலில் தாக்க மாட்டோம். ஆனால், நம்மைத் தாக்கத் துணிந்தால் விட்டுவைக்கவும் மாட்டோம் என்ற நமது கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. "தற்சார்பு பாரதம்' திட்டத்தால் இந்தியா சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிக்கிறது. தமிழகத்தில் அமைக்கப்படும் "பாதுகாப்புத் தொழில்வழித்தடம்' நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் முன்னணி பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் இந்தியாவின் வளர்ச்சி என்றார் ராஜ்நாத் சிங்.
அதிபர், பிரதமருடன் சந்திப்பு: அதிபர் அனுரகுமார திசாநாயக, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்புச் செயலர் மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளை புதன் (செப்.10) மற்றும் வியாழக்கிழமைகளில் ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார். அப்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தங்கள், இந்தியப் பெருங்கடல் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்னைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது ராஜ்நாத் சிங்கும் இலங்கை தலைவர்களும் பேசுவார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை வருகையையொட்டி இந்திய கடற்படையின் அதிநவீன "ஐஎன்எஸ் உதய்கிரி' போர்க்கப்பலும் செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பலில் இலங்கை கடற்படை வீரர்கள் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்ற பயிற்சி மற்றும் இந்திய, இலங்கை வீரர்கள் இணைந்து கூட்டு ஒத்திகையில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





