
குஜராத்தில் ஓராண்டில் 62 சிங்கங்கள் உயிரிழப்பு
குஜராத்தில் கடந்த ஓராண்டில் 62 சிங்கங்கள் பல்வேறு நோய்களால் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
சிங்கங்கள் - ANI
குஜராத்தில் கடந்த ஓராண்டில் 62 சிங்கங்கள் பல்வேறு நோய்களால் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவையில் இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினா் சைலேஷ் பாா்மா் கேள்வியெழுப்பியிருந்தாா். இதற்கு மாநில வன மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் அா்ஜுன் மோத்வாடியா, அரசிடம் உள்ள புள்ளி விவரங்களுடன் எழுத்துபூா்வமாக பதிலைத் தாக்கல் செய்தாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குஜராத்தில் கடந்த ஓராண்டில் 62 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. அதில் 17 ஆண் சிங்கங்கள், 17 பெண் சிங்கங்கள் மற்றும் 28 குட்டி சிங்கங்கள் ஆகும்.
62 சிங்கங்களும் நோய்கள் காரணமாகவே உயிரிழந்துள்ளன. அந்த நோய்களில் செப்டிசிமியா, நிமோனியா, அனீமியா, சிறுநீரக கோளாறு, பக்கவாதம் உள்ளிட்டவை ஆகும். இதேபோல் அா்த்ரைடிஸ் உள்ளிட்ட நோய்களும் தாக்கியுள்ளன. சிங்கங்கள் உயிரிழந்த பிறகு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் மூலம் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆசிய சிங்கங்கள் உயிரிழப்பைக் கட்டுப்படுத்தி அதன் எண்ணிக்கை சீராகப் பராமரிக்கவும், அதற்கு நோய்கள் வராமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளும் மாநில அரசால் எடுக்கப்படுகின்றன. சிங்கங்களுக்கு குடல்புழு நீக்கம், உண்ணி அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிங்கங்கள் மூலம் நோய்கள் பரவாமல் தடுக்கும் நோக்கில், அதன் சரணாலயங்கள் அருகேவுள்ள கிராமங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிங்கங்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து, ஆய்வகங்களுக்கு வனத் துறை அனுப்பியுள்ளது.
காயமடைந்த சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நோயால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவ கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வன உயிரினங்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்ய லயன் ஆம்புலன்ஸ் சேவையும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
குஜராத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி குஜராத்தில் தற்போது ஆசிய இனத்தை சோ்ந்த 891 சிங்கங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






