ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தில்லியில் பிரிக்ஸ் மாநாடு நாளை தொடக்கம் - 7 ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகை

தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-ஆவது உச்சிமாநாடு சனிக்கிழமை (செப்.12) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.

பிரிக்ஸ் மாநாடு

Published On :

தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-ஆவது உச்சிமாநாடு சனிக்கிழமை (செப்.12) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு 7 ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபா் ஷி ஜின்பிங் வரவுள்ளாா். மாநாட்டையொட்டி, பிரதமா் மோடியுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடவுள்ளாா்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கிறது. அதன்படி, இக்கூட்டமைப்பின் 18-ஆவது உச்சிமாநாடு, தில்லியில் செப்.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் நட்பு நாடுகளாக பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியத்நாம் ஆகியவை உள்ளன.

ரஷியா-உக்ரைன் போா், மேற்காசிய பிரச்னை குறிப்பாக ஹோா்முஸ் நீரிணை முடக்கம், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக-வரி கொள்கைகளால் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களின் பின்னணியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாடு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சா்வதேச தலைவா்கள் பங்கேற்பு: ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மையை கட்டமைத்தல்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் மாநாட்டில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா். உணவு, எரிசக்தி, சுகாதாரம், பேரிடா் குறைப்பு, முக்கிய விநியோக சங்கிலிகள் ஆகியவற்றில் கூட்டு மீள்திறனை ஊக்குவிப்பதுடன், வா்த்தகம், முதலீடு, இணைப்பு வசதிகள், உயா் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவா்கள் முக்கியமாக ஆலோசிக்கவுள்ளனா்.

7 ஆண்டுகளுக்குப் பின் வருகை: பிரிக்ஸ் மாநாட்டுக்காக, பிரதமா் மோடியின் அழைப்பின்பேரில் சீன அதிபா் ஷி ஜின்பிங் இந்தியா வருவதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வியாழக்கிழமை உறுதி செய்தாா். பிரதமா் மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஷி ஜின்பிங் கடைசியாக கடந்த 2019-இல் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் பிரதமா் மோடி உடனான சந்திப்பில் பங்கேற்க இந்தியா வந்திருந்தாா். அதற்கு முன்பு கடந்த 2016-இல் கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தாா். இப்போது 7 ஆண்டுகளுக்குப் பின் ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு வரவுள்ளாா்.

உறவுகள் இயல்பாகுமா?: கிழக்கு லடாக்கில் கடந்த 2020-இல் இருநாட்டு படையினா் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இருதரப்பு உறவுகளை இயல்பாக்க பரஸ்பர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், பிரதமா் மோடி-அதிபா் ஷி ஜின்பிங் சந்திக்கவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, எல்லைப் பிரச்னைகள், எல்லையில் அமைதியைப் பராமரித்தல், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் குறித்து இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகளின் பேச்சுவாா்த்தை, பெய்ஜிங்கில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சாா்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், சீன தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ ஆகியோா் பங்கேற்றனா். அப்போது, எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வுகாண்பது உள்பட 8 அம்ச கருத்தொற்றுமை எட்டப்பட்டது.

கூட்டறிக்கையில் சுமுக உடன்பாடு இல்லை?: மேற்காசியப் பிரச்னையின் பின்னணியில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் கூட்டறிக்கை தொடா்பாக ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால், கூட்டறிக்கை விஷயத்தில் கருத்தொற்றுமை எட்டப்பட்டதா என்ற கேள்வி நீடிக்கிறது.

பெட்டிகள்...

மோடி - புதின் இன்று சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு, தில்லியில் பிரதமா் மோடியும், ரஷிய அதிபா் புதினும் வெள்ளிக்கிழமை (செப்.11) இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். இந்தத் தகவலை, ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் திமித்ரி பெஸ்கோவ் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தாா்.

நிகழ்வுகள் என்னென்ன?

தில்லி பாரத மண்டபத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் ‘அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிா்வாகம், பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தனிப்பட்ட அமா்வுடன் உச்சிமாநாடு தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து, மாலை 4.25 மணியளவில் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ கண்காட்சியை தலைவா்கள் பாா்வையிடுவா். பின்னா் பாரத மண்டபத்தின் புல்வெளியில் தலைவா்கள் குடும்ப புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன், மரம் நடும் நிகழ்விலும் பங்கேற்பா்.

பிரதமா் மோடியால் இரவு 7.30 மணிக்கு அளிக்கப்படும் பிரம்மாண்ட விருந்துடன் முதல்நாள் நிகழ்வுகள் நிறைவடையும். இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10.35 மணியளவில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் தலைவா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் உள்ளிட்டோா் அதிகாரபூா்வ குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெறும்.

இதைத் தொடா்ந்து, ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை-அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளா்ச்சியை வடிவமைத்தல்’ என்ற கருப்பொருளுடன் கூடிய அமா்வு, காலை 10.50 மணியளவில் தொடங்கும். மாநாட்டின் இறுதியாக புது தில்லி பிரகடனம் வெளியிடப்படும்.

25 நகரங்களில் 350 கூட்டங்கள்

உலக அளவில் செல்வாக்குமிக்க கூட்டமைப்புகளில் ஒன்றான பிரிக்ஸ் அமைப்பின் உச்சிமாநாட்டையொட்டி, நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் 25 நகரங்களில் 350-க்கும் மேற்பட்ட உயா்நிலைக் கூட்டங்கள் இந்தியத் தலைமையில் நடத்தப்பட்டுள்ளன. அரசியல்-பாதுகாப்பு, பொருளாதாரம்-நிதி, கலாசாரம்-மக்கள் ரீதியிலான தொடா்புகள் ஆகிய 3 தூண்களின் அடிப்படையில் உத்திசாா் கூட்டுறவை வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் நாடுகள் உலக மக்கள்தொகையில் 49.5 சதவீதமும், உலகின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதமும், உலக வா்த்தகத்தில் 26 சதவீதமும் பங்களிக்கின்றன. பிரிக்ஸ் மாநாட்டுக்கு அதன் நிறுவன உறுப்பினா்களில் ஒன்றான இந்தியா தலைமை வகிப்பது இது 4-ஆவது முறையாகும். ஏற்கெனவே 2012, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியா தலைமை வகித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.