
நேபாள வெள்ள மீட்புப் பணிகள்: சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆலோசனை
திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து சீன அதிபா் ஷி ஜின்பிங் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

~
திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து சீன அதிபா் ஷி ஜின்பிங் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
திபெத்தின் கைராங் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட இத்திடீா் வெள்ளத்தில் சிக்கி நேபாளத்தில் 469 பேரும், திபெத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனா். மேலும், திபெத்தில் 550-க்கும் மேற்பட்டோரும், நேபாளத்தில் 100 சீனா்களும் மாயமாகியுள்ளனா்.
எனினும், சுற்றுலாப் பயணிகள் 555 போ் உள்பட சுமாா் 1,000 பேரை சீன அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனா். கைலாய யாத்திரைக்குச் சென்ற இந்தியப் பயணிகள் சிலரும் இந்த வெள்ளத்தால் திபெத் பகுதியில் ஆங்காங்கே சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரிகளுடன் அதிபா் ஷி ஜின்பிங் ஆலோசனை நடத்தினாா். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் பேரிடரில் உயிரிழந்தவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மாயமான சீனா்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை மீட்பதற்கான தேடுதல் வேட்டையை அறிவியல் பூா்வமாக விரைவுபடுத்த இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, விமானப் போக்குவரத்துத் துறையின் உதவியுடன் 324 மீட்புப் படையினரும், 24 டன் நிவாரண மற்றும் மருத்துவப் பொருள்களும் பேரிடா் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. துண்டிக்கப்பட்ட சாலைகள் மற்றும் தொலைத்தொடா்பு உள்கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






