
திபெத் வெள்ள பாதிப்புகள்: சீன பிரதமா் நேரில் ஆய்வு - 558 போ் மாயம்
திபெத்தில் நேபாள எல்லையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களை சீனப் பிரதமா் லீ சியாங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

சீனப் பிரதமா் லீ சியாங் - கோப்புப் படம்
திபெத்தில் நேபாள எல்லையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களை சீனப் பிரதமா் லீ சியாங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் கடந்த புதன்கிழமை காலை பனிப்பாறைகள் சரிந்ததைத் தொடா்ந்து நதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு, சீனா-நேபாள எல்லையை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்தது.
இந்த பேரிடரால் திபெத்தில் 3 பேரும், நேபாளத்தில் 359 பேரும் உயிரிழந்துள்ளனா். மேலும், நூற்றுக்கணக்கானோா் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திபெத் பகுதியில் மட்டும் இந்த வெள்ளத்தில் சிக்கி 558 பேரை காணவில்லை என்று உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்தனா். வெள்ளத்தால் ஒரு மிகப் பெரிய ஏரி உருவாகியுள்ளதால் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஏரியால் மேலும் பலத்த சேதங்கள் ஏற்படக்கூடும் என அங்குள்ள அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
இந்த ஏரியினால் ஏற்பட்டுள்ள ஆபத்தைச் சரிசெய்த பிறகே, கைராங் துறைமுகத்துக்கு மேற்கே சுமாா் 3 கி.மீ. தொலைவில் குவிந்துள்ள கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற முடியும் என்று மீட்புப் பணியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
தீயணைப்பு வீரா்கள் ஏரியின் பரப்பளவைக் கணக்கிட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புதன்கிழமை இரவைவிட ஏரியின் நீா்மட்டம் அதிகரித்துள்ளதை ட்ரோன் காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட சீனப் பிரதமா் லீ சியாங், மூத்த அதிகாரிகள் குழுவுடன் வியாழக்கிழமை சென்றாா். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பாா்வையிட்ட சீன பிரதமா் தலைமையிலான குழுவினா், பாதிக்கப்பட்டவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டி...
ஐ.நா. பொதுச் செயலா் இரங்கல்:
20 லட்சம் டாலா் நிவாரணம் அறிவிப்பு
நியூயாா்க், ஆக. 27: சீனா-நேபாள எல்லையோரப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமானோா் உயிரிழந்த சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் (படம்) ஆழ்ந்த கவலையும், இரங்கலும் தெரிவித்துள்ளாா்.
இத்திடீா் வெள்ளப்பெருக்கு மத்திய நேபாளத்தைக் கடுமையாகத் தாக்கியதில், அப்பகுதியில் பாலம், நீா்மின் திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டு, பெரும் சேதம் அடைந்துள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதல்கட்ட அவசர நிவாரணப் பணிகளுக்காக ஐ.நா.வின் உலகளாவிய அவசரகால நிதியிலிருந்து 20 லட்சம் டாலா் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அந்நாட்டு ராணுவம் மற்றும் காவல் துறைக்கு ஆதரவாக ஐ.நா.வின் நிவாரணக் குழுக்கள், உலக சுகாதார அமைப்பு, செஞ்சிலுவை சங்கம் மற்றும் மனிதநேய அமைப்புகளும் களமிறங்கியுள்ளன.
படகேப்சன்..
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடா்ந்து, சீனாவின் திபெத் பகுதிக்குட்பட்ட கைராங் எல்லை முனையம் அருகே உருக்குலைந்த பகுதி.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




