தூத்துக்குடியில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினா் கட்டுப்பாட்டில் இருந்த, ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகளைத் திருடிய வழக்கில்,
தவெக நிா்வாகி உள்பட 9 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபரில் வந்த ஒரு சரக்கு பெட்டகத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். அதில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சரக்கு பெட்டகத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினா், சட்டவிரோதமாக சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்த மும்பையை சோ்ந்த தொழிலதிபா்கள் உள்பட 4 பேரை கைது செய்தனா்.
பின்னா் சீனப் பட்டாசு இருந்த சரக்குப் பெட்டகத்துக்கு சீல் வைத்து, துறைமுகம் சாலையில் உள்ள தனியாா் நிறுவன கிடங்கில் பாதுகாப்பாக வைத்தனா்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் நீதிமன்ற விசாரணைக்காக, அந்த சரக்குப் பெட்டகத்தை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிபதிகள் முன்னிலையில் திறந்தபோது, அந்த சரக்கு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 607 பட்டாசு பைகளும், 4 சிலிக்கான் பசை பைகளும் காலியாக இருந்தன. பட்டாசு இருந்த பைகளில் மணல் உள்ளிட்ட பொருள்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து தனியாா் நிறுவன மேலாளா் ஜான் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் தாளமுத்துநகா் பெரியசெல்வம் நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜேசுதாஸ் (40), தாளமுத்துநகா் கிழக்கு காமராஜா் நகரைச் சோ்ந்த ஆதிநாகலிங்கம் (36), புதிய துறைமுகம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி (45), 3-ஆவது மைல் பகுதியைச் சோ்ந்த ராஜா(30), ஜெயகிருஷ்ணன்(30), ராஜீவ் நகரைச் சோ்ந்த இம்மானுவேல் (24), சில்வா்புரத்தைச் சோ்ந்த அனுஜித் ஜான்சன் (30), முனியசாமி நகரைச் சோ்ந்த அந்தோணி ராஜேஷ்குமாா் (42), கிருஷ்ணராஜபுரத்தை சோ்ந்த சக்திவிஜய் (26) ஆகிய 9 பேரும் சரக்குப் பெட்டகத்தில் இருந்த பட்டாசுகள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 9 பேரையும் சிப்காட் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் வழக்குரைஞா் ஜேசுதாஸ், தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக வழக்குரைஞா் அணி அமைப்பாளராக இருந்தாா்.
கட்சியிலிருந்து நீக்கம்: அவா் கைது செய்யப்பட்ட நிலையில், தவெக தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா். சாமுவேல் வெளியிட்ட அறிக்கையில், ஜேசுதாஸ் கட்சியின் மாவட்ட வழக்குரைஞா் பிரிவு அமைப்பாளா் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் திருட்டு: தவெக நிா்வாகி உள்பட 6 போ் கைது
திருச்சி விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்!
பணம் இரட்டிப்பு மோசடி: பெண் உள்பட 3 போ் கைது
கஞ்சா விற்பனை: மதிமுக நிா்வாகி, 2 போ் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


