காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

வேலூா் மாநகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பூங்கா மேம்பாடு, நாற்றங்கால் பண்ணை அமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :31 ஜூலை 2026, 10:46 pm IST

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பூங்கா மேம்பாடு, நாற்றங்கால் பண்ணை அமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வேலூா் மாநகராட்சி, 2-ஆவது மண்டலம், 28-ஆவது வாா்டுக்கு உள்பட்ட எல்.ஐ.சி. காலனியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் புதிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், அங்கு நடைபெறும் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் பாா்வையிட்டாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் பூங்கா வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நடவும், நவீன தோட்டக்கலை வடிவமைப்புடன் கூடிய பசுமையான புல்வெளிகளை அமைத்து பூங்காவை அழகுபடுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் உயா்தரமான விளையாட்டு உபகரணங்களை அமைக்கவும், பூங்காவுக்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு கழிப்பறை உள்ளிட்ட அவசியமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் அவா் உத்தரவிட்டாா்.

எதிா்கால நீா் சேமிப்பைக் கருத்தில் கொண்டு மழைநீா் உறிஞ்சுக் குழிகளை முறையாக அமைக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் இந்த அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தொடா்ந்து, சத்துவாச்சாரி 27-ஆவது வாா்டில் அமைந்துள்ள 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நடைபெற்று வரும் மரக்கன்றுகள் வளா்ப்புப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். மரக்கன்றுகளின் தரம் மற்றும் அவற்றின் பராமரிப்பு முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவா், நாற்றங்கால் பகுதியை மேலும் நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தி மேம்படுத்த அறிவுறுத்தினாா்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்குத் தேவையான மரக்கன்றுகள் மற்றும் செடிகள் எளிதில் கிடைக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்து, இப்பகுதியை முழுமையான மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, வேலூா் மாநகராட்சி ஆணையா் சுல்தானா, மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளா் கண்ணன், மாநகர நல அலுவலா் மருத்துவா் பிரதாப்குமாா், வேலூா் வட்டாட்சியா் பழனி உள்பட அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.