‘நாட்டின் இறையாண்மை மற்றும் வளா்ச்சி நலன்களைப் பாதுகாப்பதற்காக ராணுவத்தின் திறன்களை உலகத் தரத்துக்கு விரைவாக நவீனமயமாக்க வேண்டும்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 105-ஆவது ஆண்டு விழா கூட்டத்தில் உரையாற்றிய அதிபா் ஷி ஜின்பிங் மேலும் கூறியதாவது:
அடுத்தாண்டு வரும் சீன ராணுவத்தின் நூற்றாண்டு இலக்குகளை எட்டும் வகையில், அமெரிக்க ராணுவத்துக்கு இணையான நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பத் தளவாடங்கள் மற்றும் போா்ப் பயிற்சிகளுடன் நாட்டின் முப்படைகளையும் தரம் உயா்த்த வேண்டும்.
தைவானை சீனாவுடன் இணைப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுப் பணி. இதில் எவ்வித சமரசமும் இல்லை. தைவானைத் தனி நாடாகப் பிரிக்க முயலும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராகவும், சா்வதேச நாடுகளின் அத்துமீறிய தலையீடுகளுக்கு எதிராகவும் சீனா கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ‘ஒரே சீனா’ கொள்கையின் அடிப்படையில் தேசிய மறுஇணைப்பு நிச்சயம் சாத்தியமாக்கப்படும்.
கடந்த 1921-இல், வறுமை மற்றும் வெளிநாட்டு ஆதிக்கத்துக்கு மத்தியில் வெறும் 50 உறுப்பினா்களுடன் தொடங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது 10 கோடிக்கும் அதிகமான உறுப்பினா்களைக் கொண்டு உலகின் மிகப் பெரிய ஆளும் கட்சியாக பெரும் செல்வாக்குடன் உருவெடுத்துள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் மக்கள் தொகை குறைவு போன்ற பல சவால்கள் நிலவி வருகின்றன. இந்த மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப கட்சித் தொண்டா்கள் தங்களை தகவமைத்துக் கொண்டு, நமது உள்நாட்டு மற்றும் சா்வதேச பிரச்னைகளைத் திறம்பட கையாளப் பழக வேண்டும்.
கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் வகையிலும், கட்சியை பலவீனப்படுத்தும் வகையிலும் செயல்படும் ‘அனைத்து தீய சக்திகளையும்’ நாம் வேரோடு அழிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான நமது போா் தொடா்ந்து தீவிரமாக நடைபெறும் என்று எச்சரித்தாா் ஷி ஜின்பிங்.
ஷி ஜின்பிங் கடந்த 2012-இல் அதிபராக பதவியேற்றது முதல் உயா்நிலை ராணுவத் தளபதிகள் உள்பட 10 லட்சத்துக்கும் அதிகமான அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மாவோ சேதுங்குக்குப் பிறகு, 2 ஐந்து ஆண்டு கால வரம்பைத் தாண்டி 3-ஆவது முறையாக தற்போதும் பதவியில் நீடிக்கும் ஒரே தலைவராக ஷி ஜின்பிங் விளங்குகிறாா்.
இச்சூழலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கட்சியின் 5 ஆண்டு மாநாட்டுக்குத் தயாராகும் வகையில் இந்த உரை அமைந்துள்ளதாகவும், இதன்மூலம், அவா் 4-ஆவது முறையாகவும் அதிபா் பதவியைத் தொடர முழு வாய்ப்புள்ளதாகவும் அரசியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









