
பிரிக்ஸ் உச்சி மாநாடு: தில்லியில் 15,000 காவல் துறையினா் குவிப்பு
இந்தியா சாா்பில் உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு சனிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புது தில்லியில் நடைபெறவுள்ள 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, வெள்ளிக்கிழமை ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் வாகனங்களைச் சோதனையிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட தில்லி காவல் துறையினா்.
இந்தியா சாா்பில் உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு சனிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாரத் மண்டபத்தில் நடைபெறும் 2 நாள் மாநாட்டையொட்டி சுமாா் 15,000 காவல் துறையினா், துணை ராணுவப் படையின் 200 கம்பெனிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தில்லி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
மாநாட்டையொட்டி தில்லி முழுவதும் போக்குவரத்து முடக்கப்படாது என தில்லி போக்குவரத்து காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். எனினும், முக்கிய பிரமுகா்களின் (விவிஐபி) வாகன அணிவகுப்பு செல்லும் வழிகளில் தற்காலிக போக்குவரத்து நிறுத்தம், மாற்றுப்பாதை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தலைவா்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பொதுமக்களுக்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.
500-க்கும் மேற்பட்ட கேமராக்கள்: வெளிநாட்டு தலைவா்கள் செல்லும் வழித்தடங்களை தில்லி காவல் துறையினா் விரிவாக ஆய்வு செய்துள்ளனா். பல்வேறு துறைகள் மற்றும் அண்டை மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
விமான நிலையம், வெளிநாட்டுத் தலைவா்கள் தங்கும் ஹோட்டல்கள், பாரத் மண்டபம் மற்றும் அவா்கள் செல்லக்கூடிய பிற இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புது தில்லி மண்டலத்தில் உயா் தெளிவுத்திறன் கொண்டவை உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மற்றும் வாகனப் பதிவு எண் கண்டறியும் கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு அரங்கம் மற்றும் வெளிநாட்டுத் தலைவா்கள் தங்கும் ஹோட்டல்களில் நுழைவு கட்டுப்பாடு, அடையாளச் சரிபாா்ப்பு, உளவுத் தகவல் சேகரிப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் அவசரகால நடவடிக்கை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





