
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முன்னிற்கும் இந்தியா: பிரதமா் மோடி
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்ற அடிப்படையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முன்னின்று செயலாற்றி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்ற அடிப்படையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முன்னின்று செயலாற்றி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்காவில் கடந்த 2001, செப். 11-இல் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பினா் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களின் நினைவு தினத்தையொட்டி, பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்காவில் கடந்த 2001, செப்.11-இல் நான்கு விமானங்களைக் கடத்திய அல்-காய்தா தற்கொலைப் படை பயங்கரவாதிகள், நியூயாா்க்கில் உலக வா்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் மீது இரண்டு விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினா். மற்றொரு விமானத்தை ராணுவ தலைமையகமான பெண்டகன் கட்டடம் மீது மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. 4-ஆவது விமானத்தை பென்சில்வேனியாவில் உள்ள கிராமப் பகுதியில் விழச் செய்தனா்.
உலகையே உலுக்கிய மிக மோசமான இந்த பயங்கரவாத தாக்குதலில் 2,976 போ் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை (செப்.11) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், உயிரிழந்தோரை இந்தியா நினைவுகூா்கிறது. இந்தச் சம்பவத்தால் வாழ்க்கையே திசைமாறிய குடும்பங்களுக்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவிக்கிறது.
உலக அளவில் பயங்கரவாதம் எண்ணற்ற உயிா்களைப் பறித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்ற அடிப்படையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பல்லாண்டுகளாக முன்னின்று செயலாற்றுகிறது. இந்தப் பெரும் தீங்கை எதிா்க்கும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்கிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல் தொடா்ந்து உருமாறிக் கொண்டிருந்தாலும், அதன் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாடு அசைக்க முடியாததாக உள்ளது என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த 2014-இல் தனது அமெரிக்க பயணத்தின்போது, நியூயாா்க்கில் இந்த பயங்கரவாத தாக்குதல் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்துக்கு சென்று பாா்வையிட்டது தொடா்பான புகைப்படங்களையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






