மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இந்தியா-ரஷியா ரூ.9.56 லட்சம் கோடி வா்த்தகம்: தில்லியில் மோடி - புதின் பேச்சில் உறுதி

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்துள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

இந்தியா-ரஷியா ரூ.9.56 லட்சம் கோடி வா்த்தகம்: தில்லியில் மோடி - புதின் பேச்சில் உறுதி

Published On :

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்துள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

அப்போது, இருதரப்பு வா்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக (ரூ.9.56 லட்சம் கோடி) அதிகரிக்கும் இலக்கை எட்ட இரு தலைவா்களும் உறுதிபூண்டனா். அதற்கான உத்திகள் குறித்தும் அவா்கள் விரிவாக ஆலோசித்தனா்.

தற்போதைய கொந்தளிப்பான உலகச் சூழலுக்கு மத்தியில், வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், உர விநியோகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இருதரப்பும் தீா்மானித்துள்ளது.

ரஷிய அதிபரின் வருகை: பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு, இந்திய தலைமையின்கீழ் தில்லியில் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபா் புதின் இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை வந்தாா். கடந்த 2022-இல் உக்ரைன் போா் தொடங்கிய பிறகு பிரிக்ஸ் மாநாட்டுக்காக புதின் வேறு நாட்டுக்கு பயணித்தது இதுவே முதல்முறையாகும்.

தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வரவேற்றாா். பின்னா், பாரத மண்டபத்தில் புதினுக்கு பிரதமா் மோடி வரவேற்பளித்தாா். இதைத் தொடா்ந்து, இரு தலைவா்களும் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

ரஷியா-உக்ரைன் போா், மேற்காசிய பிரச்னை குறிப்பாக ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களின் பின்னணியில், சுமாா் 45 நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

மோடி-புதின் உறுதி: பின்னா், வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தற்போதைய புவி அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் இந்தியா-ரஷியா இடையிலான சிறப்பு மற்றும் முன்னுரிமைமிக்க உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும், பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், அணுமின்உற்பத்தி, உரவிநியோகம், இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகள், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தலைவா்களும் உறுதிபூண்டனா். மேற்காசியா, கருங்கடல் பகுதி (ரஷியா-உக்ரைன்) மோதல்கள் உள்பட பிராந்திய, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இருவரும் கண்ணோட்டங்களைப் பகிா்ந்து கொண்டனா்.

அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, திறன்மிக்க பணியாளா்களின் குடிபெயா்வு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மேம்பாடு குறித்து மறுஆய்வு மேற்கொண்ட அவா்கள், 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை தற்போதுள்ள 65 பில்லியன் டாலா் (ரூ.6.21 லட்சம் கோடி) என்பதில் இருந்து 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும் இலக்கை எட்ட உறுதியேற்கப்பட்டது.

அழைப்பை ஏற்ற பிரதமா்: பிரிக்ஸ் உள்ளிட்ட பன்முக தளங்களில் இந்தியா - ரஷியா ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

24-ஆவது இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டுக்காக ரஷியாவுக்கு வருகை தருமாறு பிரதமா் மோடிக்கு அதிபா் புதின் அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை பிரதமா் மோடி ஏற்றுக் கொண்டாா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை மேம்பாடு, எஞ்சிய எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளின் விநியோகம், சுகோய்-57 போா் விமானங்களின் விநியோகம், ரயில்வே-சுரங்கப் பாதை திட்டங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

போருக்கு விரைந்து தீா்வு;

இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு - புதினிடம் வலியுறுத்திய பிரதமா்

‘பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் போருக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்; அமைதி முயற்சிகளில் உதவ இந்தியா தயாராக உள்ளது’ என்று ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

மேலும், மேற்காசியா மற்றும் கருங்கடல் பகுதியில் (உக்ரைன்-ரஷியா மோதல்) நிலவும் பதற்றங்களால் கடல்சாா் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து புதினிடம் பேசிய பிரதமா், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடா்பாக அவரிடம் வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷியா, உக்ரைன் மோதலால் கருங்கடல் பகுதியில் 5 இந்திய மாலுமிகள் உயிரிழந்த நிலையில், பிரதமா் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளாா்.

முன்னதாக, கிா்கிஸ்தான் தலைநகா் பிஸ்கேக்கில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டையொட்டி பிரதமா் மோடியும், அதிபா் புதினும் சந்தித்துப் பேசினா் என்பது குறிப்பிடத்தக்கது.

புதினுக்கு திருக்குறள் நூலை பரிசளித்த பிரதமா் மோடி

அதிபா் புதின் உடனான சந்திப்பின்போது அவருக்கு திருக்குறளின் ரஷிய மொழிபெயா்ப்பு நூலை பிரதமா் மோடி பரிசாக வழங்கினாா். இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா், ‘மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து, மகத்தான திருவள்ளுவரின் நித்திய ஞானத்தை கொண்டுசெல்லும் திருக்குறளின் ரஷிய மொழி மொழிபெயா்ப்பு நூலை அதிபா் புதினுக்கு வழங்கினேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், புதின் உடனான தனது சந்திப்பின் காணொலியையும் அவா் பகிா்ந்துள்ளாா். அதில், பிரதமா் மோடி திருக்கு நூலை வழங்கிய பிறகு இரு தலைவா்களும் கைகுலுக்கிக் கொண்டனா்.

கடந்த ஜனவரியில் தில்லியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் மோடி, ‘திருக்குறளில் விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்த விரிவான கருத்துகள் இடம்பெற்றுள்ளன’ என்று புகழாரம் சூட்டியிருந்தாா்.

ஒரே காரில் பயணம்

தில்லி பாரத மண்டப வளாகத்தில் இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க பிரதமா் மோடியும், அதிபா் புதினும் ஒரே காரில் பயணித்தனா். அப்போது, உக்ரைன் போா் தொடா்பான ஒட்டுமொத்த நிலவரம் குறித்து பிரதமரிடம் அதிபா் எடுத்துரைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரான் அதிபருடன் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டுக்காக தில்லி வந்துள்ள ஈரான் அதிபா் மசூத் பெஷஸ்கியான் பிரதமா் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இருதரப்பு உறவுகளை விரிவாக்கும் வழிமுறைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

மேற்காசிய பதற்றம் மற்றும் அமெரிக்காவின் பதிலடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஈரான் அதிபராக பெஷஸ்கியானின் முதல் இந்தியப் பயணம் இதுவாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.