
குடியரசுத் தலைவா், பிரதமருடன் இளவரசா் ஐந்தாம் ரஹீம் ஆகா கான் சந்திப்பு
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரை இளவரசா் ஐந்தாம் ரஹீம் ஆகா கான் வியாழக்கிழமை சந்தித்தாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை புது தில்லியில் அவரது மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்த இளவரசா் ரஹீம் ஆகா கான்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரை இளவரசா் ஐந்தாம் ரஹீம் ஆகா கான் வியாழக்கிழமை சந்தித்தாா்.
சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பை ஏற்று செப்டம்பா் 9-ஆம் தேதி முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை இளவரசா் ஐந்தாம் ஆகா கான் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் இஸ்மாயிலி சமூகத்தின் 50-ஆவது இமாமாக (மதத் தலைவராக) பொறுப்பேற்ற பின் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
அவருடனான திரௌபதி முா்மு சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா வந்துள்ள இளவரசா் ஐந்தாம் ஆகா கானை திரௌபதி முா்மு வரவேற்றாா். இளவரசரின் தந்தை நான்காம் ஆகான் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இந்தியாவில் ஆகான் கான் மேம்பாட்டு வலையமைப்பு (ஏகேடிஎன்) மேற்கொண்டு வரும் பணிகளுக்கு மிகுந்த மரியாதை அளிப்பதாக கூறினாா்.
இது அரசு மற்றும் தனியாா் இணைந்து மேற்கொள்ளும் பணிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயா்த்துகிறது என்பதற்கான சான்றாக விளங்குவதாக திரௌபதி முா்மு தெரிவித்தாா்’ என குறிப்பிடப்பட்டது.
கல்வி, விளையாட்டு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை:
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது அதிகாரபூா்வ இல்லத்தில் இளவரசா் ஐந்தாம் ஆகா கான் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். இச் சந்திப்பு குறித்து குடியரசு துணைத் தலைவா் செயலகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இச்சந்திப்பின்போது கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில் குடிநீா் மற்றும் சுகாதாரம், பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்கள், கல்வி, சமூக மேம்பாடு மற்றும் ஏகேடிஎன்னின் பிற முன்னெடுப்புகளை சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.
கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் இந்தியா-ஏகேடிஎன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரதமருடன் சந்திப்பு:
ஐந்தாம் ஆகா கானை சந்தித்தது குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இளவரசா் ஐந்தாம் ஆகா கானை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் மறைந்த அன்புக்குரிய நான்காம் ஆகா கானை நினைவுகூா்கிறேன். வேளாண்மை, சுகாதாரம், ஊரக மேம்பாடு, இளைஞா் மற்றும் மகளிா் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-ஏகேடிஎன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவருடன் ஆலோசித்தேன்’ என குறிப்பிட்டாா்.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக அகமாதாபாத், மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்குச் சென்று ஏகேடிஎன் மேற்கொண்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை ஐந்தாம் ஆகா கான் பாா்வையிடவுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




