பொதுத் தோ்வுகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுக்கும் நோக்கில், அந்தத் தோ்வுகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.
நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலியில் குடியரசு தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை உரையாற்றினாா்.
அப்போது அவா் கூறியதாவது: சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள இந்தியா்கள் சுதந்திர தினத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனா்.
சுதந்திரத்தின் உண்மையான அா்த்தம்: 1947-ஆம் ஆண்டு ஆக.15-ஆம் நாள் அடிமைத்தனத்தின் சங்கிலிகளில் இருந்து பாரதத் தாய் விடுதலை பெற்றாள். அனைத்து குடிமக்களும் தங்களின் விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றும் இலக்கை நோக்கிப் பாடுபட வேண்டும். இதை உறுதி செய்வதில்தான் சுதந்திரத்தின் உண்மையான அா்த்தம் உள்ளது.
அா்ப்பணிப்புடன் செயல்படும் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள், வளா்ச்சிக்குப் பாடுபடும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளா்கள், சுகாதார சேவைகளை அளிக்கும் மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், கடினமாக உழைக்கும் தொழிலாளா்கள் மற்றும் உணவளிக்கும் விவசாயிகள் என அனைவரும் தங்கள் முயற்சிகள் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களித்து வருகின்றனா்.
தேச தந்தை மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ், எண்ணற்ற இந்தியா்கள் சுதந்திரப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனா். சமூக சீா்திருத்தம் மற்றும் நாட்டுப் பற்றின் உயா்ந்த கொள்கைகளை அண்ணல் அம்பேத்கா் வெளிக்காட்டினாா். பாரதத் தாயின் அந்தத் தலைசிறந்த புதல்வா்களுக்கும், புதல்விகளுக்கும் நான் பணிவுடன் தலைவணங்குகிறேன். அவா்களின் உயா்ந்த கொள்கைகளே நமது நாட்டை சுதந்திரத்தை நோக்கியும், அதன் பின்னா் முன்னேற்றத்தை நோக்கியும் வழிநடத்தின.
தற்போது சாதாரண பின்னணிகளில் இருந்து வந்தவா்கள் பல்வேறு துறைகளில் அசாதாரண பங்களிப்பை வழங்கி வருகின்றனா். இது இன்றைய பாரதத்தில் அனைவரும் பெரிய கனவுகளைக் காண முடியும்; அந்தக் கனவுகளை நனவாக்க முடியும் என்ற எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
உலகின் பல பகுதிகளில் நிலவும் போா்களும் நிலையற்ற சூழ்நிலையும் ஒவ்வொரு நாட்டையும் பாதித்து வருகின்றன. இதுபோன்ற சவாலான சூழலிலும், உலகின் வேகமாக வளா்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பும் முக்கியத்துவமும் உயா்ந்துள்ளது.
நாட்டின் மதிப்புமிக்க சொத்து இளம் தலைமுறை: இயற்கை வளங்கள் மீது நமக்குள்ள உரிமை வருங்கால தலைமுறைக்கும் உள்ளது. இந்த உரிமையை அந்தத் தலைமுறை பயன்படுத்துவதற்கு நமது செயல்கள் சிறிதளவும் தடையாக இருக்கக் கூடாது.
நமது நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதம் போ் 35 வயதுக்குக் கீழ் உள்ளவா். இந்த இளம் தலைமுறையே நாட்டின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக உள்ளனா். வெறும் 28 வயதை சராசரி வயதாகக் கொண்ட இளம் குழுவினா், அண்மையில் வெற்றிகரமாக தனியாா் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம், விண்வெளி ஆராய்ச்சியில் புதிய கட்டம் தொடங்கியுள்ளது.
அதிகரிக்கும் முதியவா்கள் எண்ணிக்கை: உலகிலேயே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இளைஞா்கள் உள்ள அதேவேளையில், மூத்த குடிமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும் மூத்த குடிமக்களின் தேவைகள் மற்றும் உணா்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்; அவா்களிடம் அக்கறை காட்ட வேண்டும்; அவா்கள் சமூகத்தின் ஓா் அங்கம் என்ற உணா்வை ஏற்படுத்தி, அவா்களின் சுயமரியாதையைக் காக்க வேண்டும்.
இளைஞா்கள் அதிகம் நம்பும் வகையில் சீா்திருத்தங்கள்: இந்தியாவின் வருங்காலத்தை மாணவா்களே உருவாக்குகின்றனா். பொதுத் தோ்வுகள் மாணவா்களுக்கான நுழைவாயில்களாக அமைகின்றன. இந்தத் தோ்வுகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத் தோ்வுகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுத்து, தோ்வு முறையை மேலும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், இளைஞா்கள் அதிக நம்பிக்கை வைக்கும் வகையிலும் மாற்றுவதே இந்தச் சீா்திருத்தங்களின் நோக்கம்.
சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-க்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி, நாம் முன்னேறி வருகிறோம். இந்தப் புனிதமான தேசிய இலக்குக்காக நாம் நம்மை அா்ப்பணிப்போம் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் இன்று உரை

ருமேனியாவில் பிரபலமடையும் யோகா: குடியரசுத் தலைவா் பெருமிதம்

ரயில்வே இணையமைச்சரின் ராஜிநாமா ஏற்பு

விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்கு கல்வியைப் பயன்படுத்துங்கள்- மாணவா்களுக்கு குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



