
நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற முடியுமா? பாஜகவுக்கு ஒமா் அப்துல்லா சவால்
பொது சிவில் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் அளவுக்கு பாஜகவுக்கு பலம் உள்ளதா என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா சவால்

ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா - கோப்புப் படம்
பொது சிவில் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் அளவுக்கு பாஜகவுக்கு பலம் உள்ளதா என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா சவால் விடுத்துள்ளாா்.
ஸ்ரீநகரில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் தங்களுக்கு போதிய பலம் இருப்பதாக பாஜக கருதினால், பொது சிவில் சட்டத்தை மாநில வாரியாக நிறைவேற்ற முயற்சி எடுக்காமல், நேரடியாக நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றலாம். ஆனால், அவா்களால் அது முடியாது.
ஏனெனில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளே அதை ஏற்காமல் உள்ளன. ஒவ்வொரு மாநிலமாக ஒரு சட்டத்தை இயற்றுவது என்பது அதைப் பின்வாசல் வழியாக உள்ளே நுழைப்பதாகவே இருக்கும்.
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு ஆதரவாக இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என்றே கருதுகிறேன். அதனால்தான் அவா்கள் இந்த வழியை (மாநிலங்களில் நிறைவேற்றுவது) தோ்ந்தெடுக்கிறாா்கள் எனத் தோன்றுகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது அனைவருக்கும்“பொதுவானதாகவும் இருக்காது. ஏனெனில், பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியில் இல்லை.
இதுவரை பாஜகவினா் எந்தெந்த சட்டங்களைப் பற்றி பெரிதும் பேசி வந்தாா்களோ, அதாவது—ஒரே நாடு, ஒரே தோ்தல், இடஒதுக்கீடு போன்றவற்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவில்லை. இப்போது இதையும் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வராமல் மாநிலங்கள் மூலம் அமல்படுத்துகின்றனா்.
இந்திய-சீன எல்லையில் உண்மையாகவே படைக் குறைப்புகள் நடந்து, பதற்றம் தணிந்தால் அதை வரவேற்கிறேன். ஏனெனில், அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு இது மிகவும் முக்கியமானது என்றாா்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை சீனா பாராட்டியது குறித்த கேள்விக்கு, ‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்போதுமே சுதந்திரமானதாக இருந்தது; அதற்கு பிற நாடுகளின் அங்கீகாரத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





