ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

ஆஸ்திரேலிய மதபோதகா் கிரஹாம், மகன்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளி தாரா சிங் மனு நிராகரிப்பு

ஆஸ்திரேலிய மதபோதகா் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவரின் 2 மகன்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தன்னை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரிய குற்றவாளி தாரா சிங்கின் மனுவை ஒடிஸா அரசு நிராகரித்துள்ளது.

Australian missionary Graham Stuart Staines with his wife and children

ஆஸ்திரேலிய மதபோதகா் கிரஹாம் மற்றும் அவரது குடும்பத்தினர் - ENS

Published On :

ஆஸ்திரேலிய மதபோதகா் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவரின் 2 மகன்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தன்னை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரிய குற்றவாளி தாரா சிங்கின் மனுவை ஒடிஸா அரசு நிராகரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் 1965-ஆம் ஆண்டு இந்தியா வந்தாா். ஒடிஸாவில் உள்ள மயூா்பஞ்ச் மாவட்ட கிறிஸ்தவ சங்கத்துடன் இணைந்து, அவரும் அவரின் மனைவி கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸும் பணியாற்றி வந்தனா்.

அங்கு தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணியில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் 34 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தாா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு ஜனவரியில் தனது மகன்கள் பிலிப் (10), டிமோத்தி (6) ஆகியோருடன், அந்த மாநிலத்தின் கியோஞ்சா் மாவட்டம் மனோகா்பூா் வனப் பகுதியில் அமைக்கப்பட்ட முகாமில் நடைபெற்ற கிறிஸ்தவ சபை கூட்டத்தில் ஸ்டெய்ன்ஸ் பங்கேற்றாா்.

இரவு நேரத்தில் பஜ்ரங் தள அமைப்பைச் சோ்ந்த தாரா சிங் தலைமையில் சுமாா் 50 போ் கொண்ட கும்பல், அந்த முகாமை தாக்கி, காரில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரின் 2 மகன்களை உயிருடன் தீ வைத்துக் கொளுத்தி படுகொலை செய்தது.

ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஏழைகள், பின்தங்கிய சமூகங்களைச் சோ்ந்தவா்கள் மற்றும் பழங்குடியினரை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதாக ஸ்டெயன்ஸ் மீது தாரா சிங் மற்றும் அவா் தலைமையிலான கும்பல் குற்றஞ்சாட்டிய நிலையில், அவரும் அவரின் மகன்களும் படுகொலை செய்யப்பட்டனா்.

இந்தச் சம்பவம் அப்போது நாட்டையே பேரதிா்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாரா சிங், 2000-ஆம் ஆண்டுமுதல் சிறையில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், சுமாா் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டதால், தன்னை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாரா சிங் மனு தாக்கல் செய்தாா். அவரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்குமாறு ஒடிஸா அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

அதன்படி, அவரின் மனுவை பரிசீலித்த ஒடிஸா அரசு, சிறையில் இருந்து விடுவிக்கும் தாரா சிங்கின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதேபோல ஏற்கெனவே தாரா சிங் அளித்த மனு 2016, 2019, 2020, 2022, 2023-ஆம் ஆண்டுகளில் நிராகரிக்கப்பட்டதாக ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.