2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

இனி எங்கு கேட்பேன் அவர் குரலை...

மறைந்த மூத்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவைப் பற்றி...

Veteran Tamil scholar Solomon Pappaiah

மூத்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா.

Published On :

பாப்பையா சாரின் மறைவுச் செய்தியை கேட்டுப் பதறி, மதுரைக்கு ஓடி , அவர் வீட்டுக்குப் போய், அவரை ஐஸ் பெட்டியில் பார்த்ததும் எனக்கு 'சொரேல்' என்றது. பெட்டிக்குள் அவர் முகம் சிரித்தது மாதிரித்தான் இருந்தது. முடிவிலாப் புன்னகை. அவரால் எத்தனை ஆயிரம் பேர் எல்லாக் கவலைகளையும் விட்டு, இதய பூர்வமாக சிரித்தார்கள்... மேடையில் அவரே வெடித்துச் சிரிக்கக் கூடியவர்தான். எல்லாச் சிரிப்பையும் யாரோ அந்தப் பெட்டிக்குள் பூட்டி வைத்து விட்டார்கள்.

அந்தப் பெட்டிக்குள் இருந்த அவரின் கைகளில் ஒரு திருக்குறள் புத்தகத்தைக் கொடுத்திருந்தார்கள். 'நம்ம பெரியவரு சொல்லிட்டுப் போயிட்டாரு...' என்று திருக்குறளை வைத்து ஒரு நூறு பட்டிமன்றங்களுக்காவது தீர்ப்பு சொல்லியிருப்பார். அவர் சொல்லி நமக்குப் பொருளை புரிய வைத்த குறள்கள் பல; அவர் வாழ்ந்த வாழ்க்கையால் நமக்கு பொருள் புரிந்த குறள்கள் இன்னும் பல; ஆனால், அவரின் மரணம் ஒரே ஒரு திருக்குறளின் பொருளை புரிய வைத்து விட்டது.

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'. இன்று வானுறையும் தெய்வமாகி விட்டார் எங்கள் ஞானத் தந்தை, என் பேராசான். மகத்தான வாழ்வு அவருடையது. அவரின் மரணமும் மகோன்னமான நிறைவையே அவருக்குத் தந்து விட்டது. ஒரு நாள்கூட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவருடைய மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் என்ன நினைத்தீர்கள் ஐயா? நீங்கள் எழுதிக் கொண்டிருந்த மகாகவி பாரதி பற்றிய புத்தகம் இன்னும் முடியவில்லையே என்றா...? எத்தனை ஆண்டுகால பயணங்கள்!

அவர் செய்திருக்கும் பயணங்களை தமிழ்நாட்டில் இன்னும் ஒருவர் செய்திருக்க முடியாது. ஒரு மலை கிராமத்தில் பேசிவிட்டு, இரவே ஊர் திரும்ப வேண்டும் என்று பட்டிமண்டப குழுவில் இருந்த பேராசிரியர்கள் பிடிவாதம் பிடித்ததில் இரவே ஜீப் ஒன்றிலும் கார் ஒன்றிலும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழியில் திடீரென்று பாதையை மறித்து நின்றது ஒரு 'ஒத்தக் கொம்பன்'.

திடீரென்று மனம் மாறிய யானை கொஞ்சம் நகர, ஜீப்பும் காரும் தப்பிப் பிழைத்து வந்து சேர்ந்த கதையை சிரிக்கச் சிரிக்க சொல்வார். இப்படி ஒரு ஆயிரம் பயணங்கள். சின்னஞ் சிறு கிராமங்களில் வறுமையான வீடுகளில் வாழும் எளிய மனிதரிடமும், லண்டனில் எங்களை ரோல்ஸ்ராய்ஸ் காரில் அழைத்துப் போய் 16 பதார்தங்களுடன் விருந்து வைத்த மாபெரும் தொழிலதிபரிடமும் ஒன்றே போல் மரியாதை காட்டி, முக மலர்ச்சியுடன் கை கூப்பும் சம நோக்கு அவரிடம் உண்டு. சாலமன் பாப்பையா யார்? அவர் வாழ்ந்த வாழ்க்கையில் அவர் விட்டுச் சென்ற விஷயம் என்ன? அங்கையற்கண்ணி அருளாட்சி செய்யும் ஆலவாய் நகரில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் சுந்தரம்- பாக்கியத்தம்மாள் இணையருக்கு 9-ஆவது மகனாகப் பிறந்தவர். வறுமையின் வளர்ப்பு!

ஒரு காளை விரட்டி வந்ததால் பயந்து ஓடிய சிறுவன் சாலமன் ஒரு மரத்தில் ஏற, அந்த வழியே வந்த இவரின் உறவுக்காரச் சிறுவன் ஒருவன் காப்பாற்றி , பக்கத்திலே இருந்த பள்ளிக்கூடத்தில் கரை சேர்த்தான். அந்தப் பள்ளிக்கூடத்தில் அப்போது மாணவர் சேர்க்கை நடை பெற, உடனே சிறுவன் சாலமனுக்கு அட்மிஷன் டெஸ்ட்! வலது கையால் இடது காதைத் தொடவேண்டும். பிறகு, 'ஏதாச்சும் பாடுடா' என்றதனால் ஒரு பி.யூ. சின்னப்பா பாடல். இப்படிப்பள்ளியில் சேர்ந்தவர்தான் போராடி, நண்பர்களின் உதவி பெற்று, பட்ட மேற்படிப்பு முடித்தார்.

அதுவரை காலணி வாங்கக்கூட காசில்லாத வாழ்வு. நல்ல உடைகள், கைக்கடிகாரம் எல்லாம் கனவில் மட்டுமே. இந்த நெடும் போராட்டத்தின் முடிவில் ஒரு நிம்மதித் தீவாக, அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர் ஆனார். அவர் வகுப்புகள் நிரம்பி வழிந்ததை அவரின் மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். சுமார் 34 ஆண்டுகள் ஆசிரியப் பணி. அதன் இடையில் பட்டிமன்றங்கள். அன்றைய பேச்சுலக பிரம்மாக்கள் ஜீவா, கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், ம.பொ.சி. இவர்களின் வழிகாட்டுதல்கள் இவரை தனக்கென ஒரு பேச்சுப்பாணியை தேர்ந்தெடுக்க வைத்தன.

அன்று பி.யூ. சின்னப்பா பாடலை இசைத்த குரல், உலகம் முழுவதும் விரும்பிக் கேட்கும் குரலானது. பட்டிமன்றங்களில் இலக்கியத் தலைப்புகளை மாற்றி சமூகத் தலைப்புகளைக் கொண்டு வந்தது குன்றக்குடி அடிகளார். குடும்பத் தலைப்புகளைக் கொண்டு வந்தவர் பாப்பையாதான். 1973-களில் முதல்முதலாக 'கணவனா மனைவியா' தலைப்பு அரங்கேறியது. கூட்டத்துக்குப் போகும் வழியிலேயே ஏதோ மாற்றம் தெரிகிறது. கூட்டத்தில் பெண்களும் வந்து உட்கார்ந்து இருக்கிறார்கள்! அதுவரை அது நடந்ததே இல்லை! கூட்டங்களுக்குப் பெண்கள் வந்ததால்தான் பெண் பேச்சாளர்களும் மேடைகளுக்கு வந்தார்கள். அவர் செய்த மகத்தான புரட்சி இது.

சாலமன் பாப்பையா சிறைக்குப் போனவர்! அன்று கல்லூரியில் வேலை செய்யும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெண்களுக்குக் கிடைக்கக் கொடிபிடித்து போராட்டம் செய்து சிறைக்குப் போனவர் அவர். அவரின் பட்டிமண்டபத் தீர்ப்புகள் வீடுகளில் புதிய விவாதங்களை உருவாக்கின. 'ஏன் பெண்களுக்கே தீர்ப்பு சாதகமாகத் தருகிறீர்கள்?' என ஆண்கள் யாராவது கேட்டால் 'அவங்களுக்கு இன்னும் கொடுக்கணும்பா, ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க' என்பார். அவர் பெரிய ஜனநாயகவாதி.

அதைவிட அவரின் பெருந்தன்மை மலை மாதிரி. மிகக் கடுமையாக அவரை எதிர்த்தவர்களைக் கூட மனத்தால் பகைக்காத மாமனிதர். 'சின்னப் பிள்ள, சொல்லிட்டுப் போறான், விடு. நாம இதையெல்லாம் தாண்டிப் போகணும்' என்பார். நாங்கள் கொதித்தாலும் 'விடும்மா. அடுத்த வேலையைப் பாக்கலாம். வழியில பஜ்ஜிக் கடை இருக்கா பாரு' என சூழ்நிலையின் வானிலையை சட்டென்று மாற்றும் ஜாலக்காரர். குவைத்தோ தோஹாவோ - நிகழ்ச்சி முடிந்து, நானும் ராஜா சாரும் அரக்கப் பரக்க விமான நிலையத்தில் இவரையும் வேகமாக நகர்த்திக் கொண்டு வருகிறோம்.

விமானத்துக்கு நேரம் ஆகிவிட்ட பரபரப்பு. விமான நிலையத்தில் தரை துடைத்துக் கொண்டிருந்த ஒரு தூய்மைப் பணியாளச் சகோதரர் ஓடோடி வந்தார். 'ஐயா, உங்களப் பாத்துட்டு ஓடி வர்ரேன். ஒரே ஒரு நிமிஷம், இங்கிட்டே நில்லுங்க...' என்று சொல்லி விட்டு ஓடுகிறார். 'நாம நகரலாம் ஐயா... அவரு வர தாமதமாயிட்டா நமக்கு ரொம்ப டைம் ஆயிரும்' என்று நானும் ராஜாவும் அவசரப்படுத்துகிறோம். 'அந்த தம்பி வந்து நம்மத் தேடுவாரு' என்று சொல்லி அப்படியே நிற்கிறார். நாங்களோ நேரம் என்னும் நகரும் முள்ளின் மீது நிற்கிறோம். அந்த சகோதரர் ஓடி வந்து ஒரு பேரீச்சம்பழப் பெட்டியைக் கொடுத்து விட்டு நடுவரின் காலில் விழுகிறார். 'எனக்கு கிடைச்ச எல்லா விருதுகளைவிட இந்தப் பேரீச்சம் பழப் பெட்டி பெரிசு' என்கிறார் எங்கள் நடுவர்.

திருக்குறள், புறநானூறு, அகநானூறு மற்றும் மதுரைக் காஞ்சிக்கு அவர் கொடுத்துள்ள புதிய உரைகள் அவரின் மேதைமைக்கும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணும் அகத்துக்கும் சாட்சிகள். ஒரு நாளுக்கு ஒரு குறள் என்று இனிக்க இனிக்க 1,330 குறளுக்கும் விளக்கம் சொல்லி பரவலாக திருக்குறள் காதலை உண்டாக்கிய செயற்கரிய செயல் செய்த பெருந்தகை. பட்டிமண்டபம் என்னும் கலை வீணையைக் கைகளில் பிடித்த ஆண் கலைமகள். நேரில் இடுகாடு வரை வந்து 'தமிழ் வணக்கம், தமிழ் வணக்கம்' என்ற முழக்கத்துடன்தான் அவரின் 90 ஆண்டு வாழ்வு நிறைவுற்றது.

தகனமூட்டச் செல்லும் முன்பாக அந்த முகத்தை, அதில் எனக்கான தனித்த பாசப் புன்னகை ஒன்று இருக்குமே... அதை ஒரு முறை பார்க்கப் பிரியப் பட்டேன். முடியவில்லை. அவர் எப்போதும் சொல்லும் மகாகவியின் வார்த்தைகளை அந்த இறுதி நிமிடங்களில் நினைத்துக் கொண்டேன். 'ஒன்று பரம்பொருள், நாமதன் மக்கள், உலகு இன்பக்கேணி'. அவ்வளவுதான். அவர் விடைபெற்றுக் கொண்டார்.

எல்லாம் முடிந்து மதுரை விமான நிலையம் போகும் வழியில் பூ விற்கும் சகோதரி 'மதுர மல்லி' என்று காரின் கதவைத் தட்டுகிறாள். பூ வாடியது போல் தெரிகிறது. 'இன்னிப்பூதான், வாடித்தான் வந்துச்சு' என்கிறாள். 'இளையோர் சூடார்' என்ற புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வந்தது. பாடலின் விளக்கத்தை பாப்பையாவின் புறநானூறு புத்தகத்தில் - என் அறிதிறன்பேசியில் தேடினேன்.

'வலிமை கொண்ட சாத்தன்

இறந்த அன்று

ஓ! முல்லைப்பூவே!

அவனது ஒல்லையூர் நாட்டில்

நீ பூக்கவும் செய்வாயா?'

இன்று மதுரையில் பூக்கள் எப்படி மலரும்? - என்று நினைத்து, என் ஆசிரியரை, என்னைப் பெறாத என் அன்புத் தந்தையை நினைத்து கண்ணீர் சிந்தினேன். இன்று விநாயகர் சதுர்த்தி பட்டிமண்டபம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். 'வாங்க பாரதி பாஸ்கர்' என்று என்னை அழைக்கும் அவரது குரலை இனி என்று கேட்பேன்? எங்கள் நினைவு நதிகளிலும் அவரின் புத்தகங்களிலும் மட்டுமல்ல, எங்கெங்கே தரமான பட்டிமண்டபங்கள் நடக்குமோ அங்கெல்லாம் அவர் வாழ்வாங்கு வாழ்வார். போய் வாருங்கள் ஐயா. அன்புத் தாய்மார்களும் அருமைப் பெரியவர்களும் இனிய குழந்தைகளும் இங்கே உங்களை என்றும் நினைத்திருப்போம்.

கட்டுரையாளர்: பட்டிமண்டபப் பேச்சாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.